Published : 18 Oct 2021 03:48 PM
Last Updated : 18 Oct 2021 03:48 PM

ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் குடும்பத்தினர் 17 பேர் கடத்தல்

ஹைதியில் கிறிஸ்தவ மத போதகர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 17 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ஹைதிக்குச் சென்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள், ஞாயிற்றுக்கிழமை தங்கள் குடும்பத்தினருடன் ஆதரவற்றோர் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் செல்லும் வழியில் அவர்களை வழிமறித்த கடத்தல் கும்பல் ஒன்று, அங்கிருந்து 17 பேரையும் கடத்திச் சென்றது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மத போதகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் கடத்திச் செல்லப்பட்டதற்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

முன்னதாக, ஹைதி நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இந்த அறிவிப்பு மக்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொந்தளிப்புகளின் மையமாக மொய்சே கடந்த சில ஆண்டுகளாக இருந்துவந்தார்.

மேலும், நாட்டின் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்தார். இதன் காரணமாக அவருடைய பாதுகாப்புக்கும் அச்சம் நிலவியது.

மொய்சேவின் பதவிக் காலம் கடந்த பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், தான் 2017ஆம் ஆண்டு பதவியேற்றதாகத் தெரிவித்து தனது பதவிக் காலத்தை ஒரு வருடம் நீட்டித்தார் மொய்சே. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஹைதியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அந்நாடு பெரும் கலவரங்களுக்காக அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது. வறுமையாலும் வேலையின்மையாலும் கடந்த பல ஆண்டுகளாக ஹைதி சிக்கித் தவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x