Published : 16 Oct 2021 08:19 AM
Last Updated : 16 Oct 2021 08:19 AM

ஆப்கன் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது ஐஎஸ் கோராசன்: தாக்குப்பிடிப்பார்களா தலிபான்கள்?

ஆப்கன் குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றது ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு. முன்னதாக நேற்று ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்புக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்குப் பிறகு ஐஎஸ் அமைப்புகள் தொடர்ந்து அங்கு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஷியா முஸ்லிம்களை குறிவைத்து அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

காபூல் விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் தேதி, ஆப்கானிஸ்தானில் குண்டஸ் நகரில் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். அதுவும் ஷியா முஸ்லிம்களை குறிவைத்தே நடத்தப்பட்டது.

தற்போது, நேற்று (அக்.15) ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் உள்ள ஷியா மசூதி ஒன்றில் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 32 பேர் பலியாகினர்.

யார் இந்த ஐஎஸ்-கோராசன்?

* ஐஎஸ்-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

* ஐஎஸ்-கோராசன் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

* தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், ஒருகட்டத்தில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

* அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர்.

* ஐஎஸ்-கோராசன் என்பது தலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பாகும்.

* 1,500 முதல் 2,200 ஐஎஸ்-கோராசன் அமைப்பின் உறுப்பினர்கள் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

* சிரியா, ஈராக்கில் இயங்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தானிலும் பரவினர். ஆனால் இவர்களை தலிபான்கள் கடுமையாக எதிர்த்தனர்.

* தலிபான்கள் தங்கள் வன்முறை போராட்ட களத்தை மற்றொரு அமைப்பு ஆக்கிரமிக்க விரும்பவில்லை. ஆப்கனில் தங்கள் கட்டுபாடு குறையும் என்பதும் ஒரு காரணம்.

* தலிபான்கள் என்பது பழங்குடி, தேசியவாத எண்ணம் கொண்ட ஆப்கானிஸ்தானை கட்டமைக்க விரும்பும் தீவிரவாத குழு. இதற்கு பாகிஸ்தான் ஆதரவு உண்டு.

* ஆனால் ஐஎஸ்-கோராசன் என்பது ஆப்கானிஸ்தான் என்ற தேசிய எல்லையை நம்பவில்லை. மொழி, இனம், நாடு கடந்து உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது.

* அவர்கள் பாகிஸ்தான் தொடங்கி மேற்கு ஆசியா முழுமையையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக போராடுகிறார்கள்.

* தலிபான்கள் காபூலைக் கைப்பற்றி சிறைகளைக் கைப்பற்றியபோது அவர்கள் சிறையில் இருந்த தங்கள் அமைப்பினரை விடுவித்தனர்.

* அந்த சமயத்தில் தலிபான் எதிர்ப்பு தீவரவாதிகளும், பெருமளவில் வெளியே வந்துள்ளனர். அவர்கள் தற்போது ஐஎஸ் கோராசன் அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிகிறது.

* 2020-ம் ஆண்டு ஏப்ரலில் கோராசனி கைது செய்யப்பட்டதில் இருந்து ஷஹாப் அல் முஹாஜிர் இந்த அமைப்பை வழிநடத்தி வருகிறார்.

தாக்குப்பிடிக்குமா தலிபான் ஆட்சி?

புதிதாக ஆட்சியமைத்துள்ள தலிபான்களுக்கு ஐஎஸ் கோராசன் தீவிரவாத அமைப்பினர் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளனர். தலிபான் ஆட்சியை அங்கீகரிக்க வேண்டுமானால் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் ஐஎஸ் கோராசன் அமைப்பு அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x