

வடகொரிய நீர்மூழ்கி போர்க் கப்பல் நடுக்கடலில் மாயமாகி உள்ளது. அந்த கப்பலை வட கொரிய கடற்படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதேநேரம் அமெரிக்க ராணுவம் உளவு செயற்கைக் கோள்கள் மூலம் காணாமல்போன நீர்மூழ்கியை ரகசியமாக தேடி வருகிறது.
வடகொரியா அண்மையில் ஹைட்ரஜன் குண்டு சோத னையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா. சபை கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தல் காரண மாக தென்கொரியாவும் அமெரிக் காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியில் போர் ஒத்திகையை நடத்தி வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரிய ராணுவம் அவ்வப்போது எல்லையோர கடல் பகுதியில் ஏவுகணைகளை வீசி வருகிறது. மேலும் அமெரிக்கா, தென்கொரியா மீது அணுஆயுத தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டோம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
இந்தப் பின்னணியில் வடகொரி யாவின் நீர்மூழ்கி போர்க்கப்பல் ஒன்று கட்டுப்பாட்டு அறை தொடர்பில் இருந்து துண்டிக்கப் பட்டுள்ளது. அந்த கப்பலை தேடும் பணியில் வடகொரிய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
வடகொரியாவிடம் சுமார் 70 நீர்மூழ்கி கப்பல்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக அவை கடலுக்கடியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன. மாயமான நீர்மூழ்கி கப்பல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டு அறை தொடர்பை இழந்ததா என்பது குறித்து வடகொரிய கடற்படை மூத்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அமெரிக்க ராணுவம், உளவு செயற்கைக் கோள் மூலம் மாயமான வடகொரிய நீர்மூழ்கி கப்பலை ரகசியமாக தேடி வருகிறது. தென்கொரிய கடற்படையும் தங்கள் எல்லைப் பகுதி கடலில் நீர்மூழ்கியை தேடுகிறது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியபோது, நீர்மூழ்கி கப்பலை அமெரிக்கா, தென்கொரிய கூட்டு கடற்படை சுட்டு வீழ்த்தியிருக்கக்கூடும் என்று வடகொரியா சந்தேகிக்கக்கூடும். இதன்காரணமாக அங்கு போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தனர்.