

நாம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பூமியை சரி செய்வதைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, வாழ்வதற்கு மற்றொரு இடத்தை தேடக் கூடாது என்று இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்க் கொண்டு வருகின்றன. பூமி வெப்பமடைவது தொடர்ந்தால், 2050 ஆம் ஆண்டுக்குள் மிகப்பெரும் பேராபத்தை உலக நாடுகள் எதிர்க் கொள்ளக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளன.
இந்தநிலையில் உலகின் பெரும் பணக்காரர்களாக ஜெப் பேசாஸ், எலன் மாஸ்க் போன்றோர் விண்வெளிக்கு சுற்றுலா செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதிலே தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் அளித்த பேட்டியில், “ இந்த உலகின் சிறந்த திறனாளர்கள் நாம் வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த உலகத்தை சரிசெய்யத்தான் முயற்சி செய்ய வேண்டும். அதைவிட்டு வாழ்வதற்கு வேறு இடத்தை தேட முயற்சிக்கக் கூடாது. காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கை இளைஞர்களிடத்தில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. காலநிலை மாற்றம் குறித்து தலைவர்கள் சிறப்பாக பேசுகிறார்கள். ஆனால் செயலில் காட்டுவதில்லை” என்று தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்கின்றன.
எனவே இதனைக் கருத்தில் கொண்டு உலக நாடுகளின் தலைவர்கள் கால நிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் விஞ்ஞானிகள் வலியுறுத்துக்கின்றனர்.