

நேபாளத்தில் மலைச் சாலையில் இருந்து 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பஸ்ஸில் சுமார் 60 பயணிகள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். நேபாள கோயில்களில் வழிபடச் சென்ற இவர்கள், திங்கள்கிழமை மாலை கபிலவஸ்துவில் உள்ள சுவர்கத்வாரி கோயிலில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பியூதான் மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ள லமச்சாவூர் என்ற கிராமத்தின் அருகே இந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து, 100 மீட்டர் ஆழத்தில் சென்றுகொண்டிருந்த மடிகோலா என்ற ஆற்றில் விழுந்தது.
இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலும் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும், 6 பேர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களில் சத்குரு ஹர்ஜன், சனாஹி ஹர்ஜன், ஃபுலோ ஹர்ஜன் டிலு ஹர்ஜன் என 4 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் இறந்த மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடந்துவருகிறது.