

ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள தீம் பார்க்கில் தலிபான்கள் ஒரு நாள் முழுவதையும் குதூகலமாகக் கழித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்கு தற்போது இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகாலமாக அமெரிக்கப் படைகளுக்கு எதிராகவும், ஆப்கனின் ஜனநாயக ஆட்சிக்கு எதிராகவும் போராடி வந்த தலிபான்களால் காபூலை நெருங்குவது என்பது கனவிலும் நிறைவேறாத காரியமாக இருந்தது. இந்நிலையில் தற்போது தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டதால் அவர்கள் விரும்பியபடி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல முடிகிறது.
அப்படிதான், தலைநகர் காபூலில் உள்ள கார்கா பொழுதுபோக்கு பூக்காவிற்கு தலிபான்கள் வந்தனர்.
இது குறித்து ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குப் பெயர் குறிப்பிட விரும்பாத தலிபான் ஒருவர் கூறுகையில், "எனக்கு 24 வயதாகிறது. நான் மத்திய மைதான் வார்டாக் மாகாணத்தைச் சேர்ந்த போராளி.காபூலுக்கு வந்ததிலும், கார்கா பூங்காவிற்கு வர முடிந்ததிலும் எனக்குப் பெருமகிழ்ச்சி. இங்குள்ள மக்கள் என்னையும் எனது சகாக்களையும் சகோதரப் பாசத்துடன் வரவேற்றனர்" என்றார்.
பூங்காவிற்கு வந்திருந்த தலிபான்களின் கைகளில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் யாரையும் அச்சுறுத்தாமல் மற்றவர்களைப் போல தேநீர் குடித்துக் கொண்டும், சிற்றுண்டிகளை சுவைத்துக் கொண்டும் அங்குமிங்கும் உலவினர்.
சிலர் தீம் பார்க் ராட்டிணங்களில் ஏற ஆர்வம் காட்டினர். பைரேட் ஷிப் மற்றும் ஃப்ளையங் சேர்ஸ் ராட்டிணங்கள் அவர்களை ஈர்த்தன.
ஹலிமி என்ற தலிபான் ஒருவர் கூறும்போது, "எங்கள் போராட்டத்தால் அமெரிக்கர்கள் வெளியேறிவிட்டனர் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நான் இந்தப் பூங்காவில் எனது உறவினர் ஒருவரைப் பார்த்தேன். அவர் என்னிடம், தலிபான் ஆட்சியைக் கொண்டாட தான் பூங்காவுக்கு சிற்றுலா வந்ததாகக் கூறினார்" என்றார்.
தலிபான் வீரர்களுக்கு தற்போது பாதுகாப்புப் பணியில் கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் கோராசன் தீவிரவாதிகள் மசூதியில் நடத்திய தாக்குதலில் 140 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு இனி பல மணிநேர பாதுகாப்புப் பணி அமலாகும் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தங்களுக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர்கள் தீம் பார்க் வந்து சென்றுள்ளனர்.