Published : 08 Oct 2021 06:53 PM
Last Updated : 08 Oct 2021 06:53 PM

ஆப்கனில் மீண்டும் பயங்கரம்: மசூதியில் தொழுகையின் போது குண்டுவெடித்து 100 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் மசூதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவியுள்ளனர்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது அதிலிருந்தே ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் வெளியேறிவருகின்றனர். அமெரிக்கா மட்டும் 1,24,000 பேரை மீட்டது. தலிபான்களின் கெடுபிடி நிறைந்த ஆட்சிக்குப் பயந்து இன்னமும் அங்கிருந்து மக்கள் வெளியேறக் காத்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டாலும் அவர்களுக்கு எதிராக வடக்கு கூட்டணி உள்ளிட்ட இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அங்கு இன்னும் பொருளாதாரம் மீளவில்லை. இதனால் அங்கு மக்கள் பணமின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து மசூதி வெடித்ததில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
குண்டூஸ் மாகாணத்தின் பண்டார் கான் அபாத் மாவட்டத்தில், ஷியா முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமையான இன்று பிற்பகல் மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது மசூதியில் பயங்கர சத்ததுடன் குண்டு ஒன்று வெடித்தது. இதில் பலர் உடல் சிதறி பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

காபூல் விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்தநிலையில் அந்நாட்டில் தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x