

வடகொரியாவுக்குத் தேவையான கரோனா மருந்துப் பொருட்களைக் கப்பல் வழியாக உலக சுகாதார அமைப்பு அனுப்பத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''வடகொரியாவுக்குத் தேவையான கரோனா மருந்துப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு வழங்கத் தொடங்கியுள்ளது. சீனாவின் தாலியன் துறைமுகத்திலிருந்து வடகொரியாவுக்கு மருத்துவப் பொருட்களை உலக சுகாதார அமைப்பு அனுப்பத் தொடங்கியுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கரோனாவால் பல்வேறு நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது வடகொரியாவில் மட்டும் கரோனா தொற்று குறித்த எந்தத் தகவலும் வெளியிடப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் சீனா வழங்கிய சினோவாக் கரோனா தடுப்பூசியை வாங்க வடகொரியா மறுத்துவிட்டது. தங்கள் நாட்டில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என வடகொரியா தெரிவித்தது.
கரோனா அச்சத்தால் வடகொரியா தொடர்ந்து எல்லைகளை மூடிவைத்துள்ளது. மேலும், அணு ஆயுத சோதனைகளால் பல்வேறு நாடுகளிடமிருந்தும் பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ளது வடகொரியா.
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் ஆட்சியில், ஏவுகணை தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் கடுமையான மோதல் நிலவியது. இதன் காரணமாக வடகொரியாவின் மீது பல பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரத் தடைகள் காரணமாக வடகொரியா உணவுப் பஞ்சத்தையும் எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.