அமெரிக்காவில் பயணிகள் விமானத்துக்கு அருகில் பறந்த ஆளில்லா போர் விமானம்

அமெரிக்காவில் பயணிகள் விமானத்துக்கு அருகில் பறந்த ஆளில்லா போர் விமானம்
Updated on
1 min read

லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம் அருகே லுஃப்தான்சா பயணிகள் ஜெட் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது 200 அடிக்கு அருகில் ஆளில்லா போர் விமானம் ஒன்று மோதும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமானத்தை தரையிறக்கியவுடன் லுஃப்தான்சா ஏ380 விமானத்தின் பைலட் புகார் அளித்தார்.

விமானம் அப்போது 5,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமான நிலையத்திற்கு 14 மைல்கள் கிழக்காக பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் இந்த ட்ரோன் அபாயம் ஏற்பட்டது. ஆனால் விமானி சாமர்த்தியமாக அதிலிருந்து திசைதிருப்பி பாதுகாப்பாக தரையிறக்கினார்.

ஆளில்லா போர் விமான பற்றிய தகவல் இல்லை:

லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப்பின் ஹெலிகாப்டர்கள் ஆளில்லா போர் விமானங்கள் குறித்து கண்காணிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் இந்த குறிப்பிட்ட ஆளில்லா போர் விமானம் எங்கிருந்து ஏவப்பட்டது, எங்கு இறங்கியது, எந்த வகையான ட்ரோன், யாருக்குச் சொந்தமானது என்ற விவரங்கள் இன்னமும் தெரியவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து செனட்டர் டயான் ஃபெய்ன்ஸ்டெய்ன் கூறும்போது, “ஒரு விமானம் விழுந்து நொறுங்கும் விதமான மற்றுமொரு சம்பவமாகும் இது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவே முடியாது. பயணிகள் விமானத்திற்கு 200 அடி அருகில் ஆளில்லா போர் விமானம் சென்றுள்ளது. அலட்சியமாக ஆளில்லா போர் விமானங்களை பறக்க விடுவதன் அபாயங்களை இது உணர்த்துகிறது” என்றார்.

லுஃப்தான்சா விமானத்தின் இஞ்ஜினுக்குள் பறவையைப் போல் இந்த ட்ரோன் உள்ளிழுக்கப்பட்டால் அவ்வளவுதான் பேராபத்துதான், என்று அரசும் தொழிற்துறை அதிகாரிகளும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது போன்று நடப்பது முதல் முறையல்ல, 241 முறை ஆளில்லா போர் விமானம், பயணிகள் விமானத்துக்கு அருகில் சென்றிருக்கின்றன, ஆனால் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் 28 முறை பைலட் சாதுரியமாக விமானத்தைத் திசை திருப்பியுள்ளார்.

இந்த சம்பவம் அமெரிக்காவில் விமானப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in