

அதிக விலையுள்ள வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு 15-வது இடம் கிடைத்துள்ளது.
2013-ம் ஆண்டில் இந்தியாவில் லட்சங்களைக் கொட்டி வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 75 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 2012-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 63 ஆயிரமாக இருந்தது. அப்போது சர்வதேச அளவில் இந்தியா 16-வது இடத்தில் இருந்தது.
சர்வதேச அளவில் செல்வ வளம் மேலாண்மை குறித்த பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் 14-ம் ஆண்டறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் தனியாரிடம் உள்ள செல்வம் 2013-ம் ஆண்டில் 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய ஆண்டில் இந்த வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது.
2018-ம் ஆண்டில் சர்வதேச அளவில் செல்வ வளமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியா 7-வது இடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதிக பண மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை வைத்திருப்பவர்களில் அமெரிக்கர்கள் முதலிடத்தில் உள்ளனர். சீனாவில் இது அதிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதே நேரத்தில் ஜப்பானில் அதிக மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துவிட்டது.
கண்டங்கள் ரீதியாக செல்வ வளமிக்க பகுதியில் தென் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. மேற்கு ஐரோப்பிய பகுதி 2-வது இடத்திலும், ஆசிய பசிபிக் பகுதி 3-வது இடத்திலும் உள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சீனா, இந்தியா, இந்தோனேசியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வேகமாக அதிகரித்துள்ளது.
லட்சக்கணக்கில் செலவிட்டு அதிக விலை உயர்ந்த விட்டு உபயோகப் பொருள்களை வாங்குபவர்கள் செறிவுள்ள இடம் கத்தார், ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆகும்.
அமெரிக்காவில் கோடிகளைக் கொட்டி வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குபவர்கள் அதிகம். குறைந்த மக்கள் தொகையிலும் கோடிகளை செலவு செய்து வீட்டு உபயோகப் பொருள்களை அதிகம் வாங்கும் நாடுகளில் ஹாங்காங், ஸ்விட்சர்லாந்து ஆகியவை உள்ளன.