

காங்கோ நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற செல்ஃபி கொரில்லா குரங்கு டகாஸி தனது பராமரிப்பாளரை அணைத்தபடியே இறுதி மூச்சை விட்டது.
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வனப்பகுதியில் கடந்த 2007ல் டகாஸி என்ற கொரில்லா குரங்கு கண்டுபிடிக்கப்பட்டது. 2 மாதங்களே ஆன அந்த குட்டிக்குரங்கு தனது தாய் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கூட அறியாமல் அதன் சடலத்தைக் கட்டிக்கொண்டு கிடந்தது. மலையக கொரில்லாக்களின் எண்ணிக்கை அப்போது வெறும் 750 என்றளவிலேயே இருந்தது. அவற்றிற்கு உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களால் பெரும் ஆபத்து இருந்தது. இதனால், விருங்கா தேசியப் பூங்காவில் மலையக கொரில்லாக்களைப் பாதுகாக்கவே தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டது.
அந்த மையத்தின் பொறுப்பாளர் ஆண்ட்ரே பவுமா இருந்தார். முதன்முதலில் ஆண்ட்ரே பவுமா டகாஸியைப் பார்த்ததும் அங்குதான்.
அன்றிலிருந்து டகாஸியின் இறுதி நிமிடம் வரை ஆண்ட்ரே பவுமாதான் அதனைப் பராமரித்து வந்தார். இருவருக்கும் இடையே தந்தை, குழந்தைக்கு இடையேயான நெருக்கமுண்டு. 2 மாத குட்டி கொரில்லாவாக வந்த டகாஸி பயத்துடனும், பதற்றத்துடனேயுமே எப்போதும் காணப்பட்டது. அதனை, பவுமா அரவணைத்து இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தார். ரணங்கள் ஆறிய டகாஸி, பவுமாவுடன் நெருக்கமானது.
2019-ல் டகாஸியும், இன்னொரு பெண் கொரில்லாவான டேஸேவும் காங்கோ விருங்கா தேசியப் பூங்காவில் ரேஞ்சர்கள் இருவர் செல்ஃபி எடுக்க இடையில் தோரணையாக நின்று போஸ் கொடுத்த காட்சி ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட அந்தப் புகைப்படத்தில் பூங்கா ரேஞ்சர் மத்தியூ ஷமாவூ டிஷர்ட்டுடன் போஸ் கொடுத்திருப்பார். அவர் பின்னால் நிற்கும் இரண்டு கொரில்லாக்களும் ஆகச் சிறந்த போஸைக் கொடுத்திருக்கும். அதில் டகாஸி தனது இடது தோளைப் பார்த்திருக்கும். நாடியைச் சற்று கீழே இறக்கி புகைப்படக்காரர்கள் சொல்லும் சின் டவுன் உத்தரவைப் பின்பற்றியதுபோல் போஸ் கொடுத்திருக்கும். மற்றொரு கொரில்லா அழகான புன்னைகையுடன் போஸ் கொடுத்திருக்கும்.
இந்தப் புகைப்படத்தால் டகாஸி உலகின் செல்லப்பிள்ளையாகி இருந்தது. காலங்கள் செல்ல, டகாஸிக்கு நோய் ஏற்பட்டது. சமீபகாலமாகவே அது மோசமான உடல்நிலையில் இருந்தது. கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி டகாஸி உயிரைவிட்டது. அதுவும், தன்னைப் பராமரித்து வந்த பவுமாவின் நெஞ்சில் சாய்ந்து அவரை அணைத்தபடியே உயிரை விட்டுள்ளது.
இறந்த தாயை அணைத்தபடி கிடந்த கோலத்தால் மீட்கப்பட்ட டகாஸி, பராமரிப்பாளரை அணைத்தபடி உயிரை விட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஊடகத்திடம் பேச இப்போதைக்குத் தயாராக இல்லை என ஆண்ட்ரே பவுமா கூறிவிட்டார். ஆனால், அவர் ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டுள்ளார்.
அதில், ''நான் டகாஸியுடன் பழகிய நாட்கள் மனித குலத்திற்கும் கொரில்லா ஏப்களுக்கும் இடையே ஏன் நெருக்கம் தேவை என்பதை உணர்ந்தேன். அதேபோல், நாம் ஏன் அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டேன். நான் அவளை ஒரு குழந்தையாக நினைத்து நேசித்தேன். அவளுடைய புன்னகை பூக்கும் முகம் ஒவ்வொரு முறை நான் அவளைப் பார்க்கும் போதும் எனக்கு மகிழ்ச்சியைக் கடத்தும்'' என்று தெரிவித்துள்ளார்.