

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் தான்சானியா நாட்டு எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா.
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆப்பிரிக்காவின் டான்சானியாவைப் பூர்வீகமாகக் கொண்டு சான்ஸிபாரில் வளர்ந்து பின்னர் 1960களில் இங்கிலாந்துக்கு அகதியாக வந்து சேர்ந்த அப்துல்ரசாக் குர்னா இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தனது படைப்புகளில் வெவ்வேறு கண்டங்கள், கலாச்சாரங்களுக்கு இடையே சிக்கிக் கொள்ளும் அகதிகளின் வாழ்க்கையை தத்ரூபமாக கொண்டுவந்ததற்காக அவருக்கு நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவருடைய பாரடைஸ் (Paradise) நாவல் 1994ல் புக்கர் பரிசுக்காகப் போட்டிபோட்டது குறிப்பிடத்தக்கது. இதுவரை இவர் 10 நாவல்களை எழுதியுள்ளார். இங்கிலாந்தின் கென்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியாக இருக்கிறார்.
இலக்கியத்துக்கான நோபல் பரிசுடன் அப்துல்ரசாக்குக்கு 1.14 மில்லியன் டாலர் ரொக்கப் பணமும் பரிசாக வழங்கப்படும்.