

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 400 பணக்காரர்களின் பட்டியலில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடம்பெறவில்லை. 25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
இதுகுறித்து ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையில், “75 வயதான டொனால்ட் ட்ரம்ப் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைப் போலவே தற்போதும் பணக்காரராக இருக்கிறார். ஆனால், கோவிட் -19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து சுமார் 600 மில்லியன் டாலரை இழந்துள்ளார்.
கிரிப்டோகரன்ஸிகள் மற்றும் தொழில்நுட்பப் பங்குகள் போன்ற சொத்துகள் சமீபத்திய மாதங்களில் நல்ல வளர்ச்சி பெற்றிருந்தாலும், ட்ரம்ப்பின் ரியல் எஸ்டேட் தொழில்களில் அவருக்கு வரவு ஏற்படவில்லை. இதன் காரணமாக அவர் பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அவர் தனது செல்வத்தைப் பன்முகப்படுத்த ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் தவறவிட்டுவிட்டார்.
கடந்த வருடம் ஃபோர்ப்ஸ் பணக்காரர்களின் பட்டியலில் ட்ரம்ப் 339 -வது இடத்தில் இருந்தார். இந்த வீழ்ச்சிக்கு ட்ரம்ப்பே காரணம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் பணக்காரர்களின் பட்டியலில், அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசாஸ் நான்காவது ஆண்டாகத் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.