Published : 01 Oct 2021 03:17 AM
Last Updated : 01 Oct 2021 03:17 AM

2,700 உலக கோடீஸ்வரர்கள் உதவினால் வறுமையில் வாடும் குழந்தைகள் பெண்களை பாதுகாக்க முடியும்: கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தல்

வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் கோடிக்கணக்கான குழந்தைகளையும், பெண்களையும் பாதுகாக்க வேண்டியது உலக நாடுகளின் கடமை என்று நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி வலியுறுத்தியுள்ளார்.

நியூயார்க்கில் ஐ.நா. மாநாடுநடைபெற்று வருகிறது. இதில்"வறுமையை ஒழிக்க வேலைவாய்ப்பு மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்தல்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் 2014-ல் நோபல் பரிசு பெற்றகைலாஷ் சத்யார்த்தி பேசியதாவது: கரோனா தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளும், பெண்களும் வறுமையின் கோரப்பிடிக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

52 பில்லியன் டாலர்கள் தேவை

லட்சக்கணக்கான குழந்தை தொழிலாளர்கள் உருவாக்கப்பட்டு விட்டனர். குறிப்பாக, குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவர்களை நாம் உடனடியாக மீட்டெடுத்து கல்விச் சாலைகளுக்கு அனுப்ப வேண்டியது உலக நாடுகளின் கடமையாகும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகளை பாதுகாக்க தவறினால், நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான இலக்குகளை நம்மால் அடைய முடியாது.

இதுபோன்ற குழந்தை தொழிலாளர்களை மீட்க 52 பில்லியன் டாலர்கள் தேவை. இது எளிதாக திரட்டக்கூடிய பணம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. தற்போது உலக அளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் 2,700 பேர்இருக்கிறார்கள். அவர்கள் நினைத்தால், இதில் மகத்தான பங்களிப்பை வழங்க முடியும். அதுமட்டுமின்றி, உலக நாடுகளும் இதில் தங்கள் பங்களிப்பை வழங்கமுன்வர வேண்டும். இந்த விவகாரத்தில் துணிச்சலான யோசனைகள் நிறையவே இருக்கின்றன. ஆனால், அவற்றை செயல்படுத்த துணிச்சலான, மனிதாபிமானம் மிக்க தலைவர்கள் தான் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x