சீனாவில் மின்வெட்டால் தொழில் உற்பத்தி பாதிப்பு: வளர்ச்சி கணிப்பை குறைத்தது கோல்ட்மேன் சாச்

சீனாவில் மின்வெட்டால் தொழில் உற்பத்தி பாதிப்பு: வளர்ச்சி கணிப்பை குறைத்தது கோல்ட்மேன் சாச்
Updated on
1 min read

சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் மின்வெட்டு பிரச்சினை அதிகரித்திருப்பதால் உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் வளர்ச்சி கணிப்பை 8.2-லிருந்து 7.8 சதவீதமாகக் குறைத்துள்ளது கோல்ட்மேன் சாச் நிறுவனம்.

சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66 சதவீத பங்களிக்கும் 17 மாகாணங்களில் கடந்தசில மாதங்களாக மின்வெட்டு பிரச்சினை அதிகரித்துள்ளது. இதனால் பல லட்சக்கணக்கான வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டின் பெருமளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்பிள்,டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் 60 சதவீத பொருளாதாரம் நிலக்கரி சார்ந்தவையாக உள்ளன. கரோனா காலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் ஆஸ்திரேலியாவுடனான வர்த்தக சண்டையில் நிலக்கரி இறக்குமதியும் பாதித்தது. இதனால் நிலக்கரி விலை கடும் உயர்வை சந்தித்தது. மேலும் கரியமில வாயு வெளியேற்றம் தொடர்பாகவும் நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்தேவை இந்த ஆண்டின் பாதியிலேயே கரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியது. சீனாவின் இந்தச் சூழல் காரணமாக, கோல்ட்மேன் சாச் நிறுவனம் சீனாவின் வளர்ச்சி கணிப்பை 8.2-லிருந்து 7.8 சதவீதமாகக் குறைத்துள்ளது. இதற்கு முன்பு நொமுரா நிறுவனம் சீனாவின் வளர்ச்சி கணிப்பை 7.7 சதவீதமாகக் குறைத்திருந்தது.

பெரும்பாலான பகுதிகளில் தினசரி 8 முறை வாரம் 4 நாட்களுக்கு மின்வெட்டு இருப்பதாகக்கூறப்படுகிறது. சாலைகளில் வாகனங்கள் இருட்டில் பயணிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்துக்கு சப்ளைசெய்யும் யுனிமைக்ரான் நிறுவனம்மின்வெட்டு காரணமாக 5 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தியது. டெஸ்லா கார்களுக்கான உபகரணங்களை வழங்கும் நிறுவனத்துக்கும் உற்பத்தி பாதித்தது. இவைபோலவே பல நிறுவனங்கள் மின்வெட்டு காரணமாக உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளன.

மேலும் மால்கள், கடைகள் ஆகியவையும் மின்வெட்டு காரணமாக முன்கூட்டியே மூடும் கட்டாயத்துக்கு உள்ளாகியுள்ளன. இதனால் வட கொரியாவில் வாழ்வதுபோல் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in