Last Updated : 29 Sep, 2021 02:53 PM

 

Published : 29 Sep 2021 02:53 PM
Last Updated : 29 Sep 2021 02:53 PM

ஆப்கனில் நீதிக்கே பாதுகாப்பில்லை: குற்றவாளிகள் என அறிவித்த பெண் நீதிபதிகளை வேட்டையாடும் கொலையாளிகள் 

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு முந்தைய ஆட்சியின்போது, கொலைக் குற்றவாளிகள் என்று அறிவித்த பெண் நீதிபதிகளைத் தேடிச் சென்று கொலையாளிகள் வேட்டையாடி வருகின்றனர். இதனால் ஆப்கானிஸ்தானில் நீதிக்கும், நீதிபதிக்குமே பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறியபின் தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். கடந்த முறை போன்று கொடுமையான ஆட்சி இருக்காது, பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்கப்படும், சுதந்திரம் வழங்கப்படும் எனத் தலிபான்கள் தரப்பில் அறிவித்தாலும் பெண்களைத் தொடர்ந்து அடிமை போன்றே நடத்துகிறார்கள்.

பெண் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை, அமைச்சரவையில் பெண்கள் இல்லை, உயர்கல்விக் கூடங்களில் பெண்களுக்குத் தனி வகுப்பறைகள், மகளிர் மேம்பாட்டுத் துறையில் கூட பெண்கள் வேலை பார்க்கத் தடை, பல்கலைக்கழங்களில் பெண்கள் பணியாற்றத் தடை எனப் பல கட்டுப்பாடுகளைப் பெண்களுக்குத் தலிபான்கள் விதித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் சில மாகாணங்களில் ஆண்கள் தாடி வைக்க வேண்டும், தாடியை ட்ரிம் செய்யவும், மழிக்கவும் கூடாது என முடிதிருத்துவோருக்குத் தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதுபோன்ற கொடுமையான செயலில் ஈடுபடும் தலிபான்கள், இதுவரை சிறையில் இருந்து ஆயிரக்கணக்கான குற்றவாளிகளையும், தண்டனைக் கைதிகளையும் விடுவித்துள்ளனர். தலிபான்களுக்கு முந்தைய ஆட்சியில் விடுவிக்கப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள்.

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் கொலைக் குற்றவாளிகள் பலர் தங்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த பெண் நீதிபதிகளை வேட்டையாடி வருகின்றனர். பலரும் சேர்ந்து பெண் நீதிபதிகளைத் தேடிவருவதாக யூரோவீக்லி தெரிவிக்கிறது.

தலிபான்களுக்கு முந்தைய ஆட்சியில் 220 பெண் நீதிபதிகள் பணியாற்றிய நிலையில் தலிபான்கள் கைகளுக்குள் ஆப்கன் சென்றபின், அவர்கள் அனைவரும், மறைந்து வாழ்கின்றனர். பெண்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த பெண் நீதிபதிகள் அனைவரும் தங்களின் உயிரைப் பாதுகாக்க மறைவான இடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த ஊடகம் ஒன்றுக்கு ஆப்கனின் முன்னாள் நீதிபதி ஒருவர் அளித்த பேட்டி:

“தலிபான்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நான் தப்பித்துவிட்டேன். என்னுடைய பதவிக் காலத்தில் ஆயிரக்கணக்கான தவறு செய்த ஆண்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்திருக்கிறேன்.

பல ஆண்கள் பலாத்காரக் குற்றங்கள், கொலை, கொடுமைப்படுத்துதல் போன்ற குற்றங்களைச் செய்து தண்டனை பெற்றவர்கள். தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் அந்தக் குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அந்தக் குற்றவாளிகள் மூலம் எனக்கு மட்டுமல்ல பெண் நீதிபதிகள் அனைவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தவாறு உள்ளன.

சிறையிலிருந்து கைதிகளைத் தலிபான்கள் விடுவித்துவிட்டார்கள் என்ற செய்தி நான் தூங்கிக் கொண்டிருந்தபோது எனக்குக் கிடைத்தது. அடுத்த நிமிடமே நான் வீட்டிலிருந்து என் குடும்பத்தார், குழந்தைகளுடன் தப்பித்துவிட்டேன். காரில் காபூல் நகரைக் கடந்துவிட்டேன். நான் புர்கா அணிந்திருந்ததால், என்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை. நல்லபடியாகத் தலிபான்களின் அனைத்து சோதனைச் சாவடிகளையும் கடந்து சென்றோம்.

நாங்கள் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றபின் எங்களுக்குக் கிடைத்த செய்தியின்படி, தலிபான்களும், கைதிகளும் என் வீட்டுக்கு வந்து சென்றுள்ளனர். சமீபத்தில் ஒருவருக்கு 20 ஆண்டுகள் தண்டனை விதித்தேன். அந்த நபரும் அங்கு வந்துள்ளார் எனத் தகவல் கிடைத்தது.

அந்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை விதித்து தீர்ப்பளித்தவுடன், அந்தக் குற்றவாளி என்னிடம் வந்து, நான் வெளியே வந்துவிட்டால் என் மனைவியைக் கொன்றது போன்று உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன் என ஆவேசமாகத் தெரிவித்துச் சென்றார்.

அந்த நேரத்தில் அந்த மிரட்டலை எளிதாக எடுத்தேன். ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபின் அந்தக் குற்றவாளி விடுவிக்கப்பட்டபின், என்னைத் தேடிவந்துள்ளார். என்னைப் பற்றிய விவரங்களை எல்லாம் அந்த நபர் சேகரித்துச் சென்றுள்ளார். என்னைப் பழிக்குப் பழிவாங்குவேன் எனப் பலரிடமும தெரிவித்துள்ளதாகத் தகவல் அறிந்தேன். இது எனக்கு மட்டுமல்ல பல பெண் நீதிபதிகளுக்கும் இதே கதிதான் என்பதால், மறைந்து வாழ்கிறோம்''.

இவ்வாறு அந்தப் பெண் நீதிபதி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x