எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை: பாக்., கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்

எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை: பாக்., கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்
Updated on
1 min read

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இன்சமாம் உல் ஹக்குக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நேற்று பரபரப்பு தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், தனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அங்கு மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

முன்னதாக நேற்று, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வுக்குழுத் தலைவருமான இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. அவருக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இன்சமாம் உல் ஹக் Inzamam ul Haq - The Match Winner என்ற தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர், "பாகிஸ்தானிலும் உலகின் மற்ற நாடுகளிலும் உள்ள ரசிகர்கள் எனக்காகப் பிரார்த்தனை செய்ததற்கு நன்றி. பாகிஸ்தான் மற்றும் உலகில் உள்ள பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் நான் பூரண குணம் பெற வேண்டி வாழ்த்துச் செய்திகளை அனுப்பியுள்ளீர்கள். அதற்கும் நன்றி.

எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. நான் எனது வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனை சென்றேன். அங்கே எனக்கு ஆஞ்சியோகிராஃபி பரிசோதனை செய்தனர். அதில் எனது இதயத்துக்குச் செல்லும் ஒரு ரத்த நாளத்தில் அடைப்பு இருப்பதாகக் கூறினர். அதனால் ஸ்டென்ட் பொருத்தப்பட்டது. நான் 12 மணி நேரத்தில் வீடு திரும்பிவிட்டேன். சிகிச்சை நல்லபடியாக முடிந்தது. நான் இப்போது சவுகரியமாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணி 1992-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றபோது அந்த அணியில் இடம் பெற்றிருந்தவர் இன்சமாம் உல் ஹக். வலதுகை பேட்ஸ்மேனான இன்சமாம் உல் ஹக் பாகிஸ்தான் அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.51 வயதான இன்சமாம் உல் ஹக் 375 ஒருநாள் போட்டிகளில் 11,701 ரன்களும், 119 டெஸ்ட் போட்டிகளில் 8,829 ரன்களும் சேர்த்துள்ளார். கடந்த 2007-ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இன்சமாம், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு பதவிகளை வகித்தார். பேட்டிங் ஆலோசகர், தேர்வுக்குழுத் தலைவராக கடந்த 2016 முதல் 2019-ம் ஆண்டுவரை இருந்தார். ஆப்கானிஸ்தான் அணிக்கான பயிற்சியாளராகவும் இன்சமாம் உல் ஹக் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in