8 மணி நேரம் மின்வெட்டு; வட கொரியாவில் வாழ்வதுபோல் இருக்கிறது: சீன மக்கள் வேதனை

8 மணி நேரம் மின்வெட்டு; வட கொரியாவில் வாழ்வதுபோல் இருக்கிறது: சீன மக்கள் வேதனை
Updated on
2 min read

நிலக்கரி பற்றாக்குறையால் சீனாவின் பல்வேறு நகரங்களிலும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இதனால், சீன தொழிற்சாலைகள் பல முடங்கியுள்ளன.

இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் சீனப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் ஏற்படும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. (கோல்ட்மேன் சாக்ஸ் குழும நிறுவனம் என்பதொரு உலக அளவிலான முதலீட்டு வங்கி மற்றும் பத்திரங்கள் நிறுவனமாகும்)

கரோனா பெருந்தொற்று காரணமாக உலகளவில் ஏற்றுமதி, இறக்குமதியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக அங்கு கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

மொத்தம் 17 மாகாணங்களில், கடந்த சில மாதங்களாகவே மிக மோசமாக மின்வெட்டு நிலவுகிறது. இந்த குறிப்பிட்ட மாகாணங்களில் இருந்துதான் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு 66% பங்களிப்பு கிடைக்கிறது. இந்நிலையில் இந்த மாகாணங்களில் உள்ள சிறு, குறு, கனரக தொழிற்சாலைகள் என அனைத்துமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பெருந்தொற்றும்; சிறு தகராறும்:

சீனா தனக்குத் தேவையான நிலக்கரிக்கு ஆஸ்திரேலியாவையே சார்ந்திருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ரீதியாக ஏற்பட்ட சில பிணக்குகளால் சீனாவுக்கு நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கெனவே பெருந்தொற்றால் இறக்குமதி பாதிப்பு. அத்துடன் வர்த்தகத் தகராறு என இருமுனைகளில் நிலக்கரி பெறுவது பாதிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில், மின் பகிர்மானத்தை ரேஷன் முறையில் சீனா விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிகம் பேர் அதிகமாக மின் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரங்களில் மின் வெட்டு அதிகமாக அமல்படுத்தப்படுகிறது.

இந்த மின்வெட்டால் தொழிற்சாலை உற்பத்தி சரியும் சூழலில் நாட்டின் வருடாந்திர பொருளாதார 8.2%ல் இருந்து 7.8% ஆகக் குறையும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடர் மின்வெட்டால் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பீஜிங் ஊடகம் வெளியிட்ட வீடியோவில், ஷென்யாங் நகரில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் கூட இல்லாமல் இயங்கும் வாகனப் போக்குவரத்து குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

லியோனிங் எனும் நகரில்,வாரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை என்ற வீதத்தில் மின்வெட்டு அமலில் இருப்பதாக அந்த நகரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மின்வெட்டால் பெரிய வணிக வளாகங்கள் மாலை மங்கியவுடன் மூடப்படுகின்றன. சிறு கடைகள் அனைத்துமே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகின்றன.

வட கொரியாவில் வாழ்வதைப் போல் இருப்பதாக புதிய மின்வெட்டுப் பிரச்சினை குறித்து சீன மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in