

லண்டனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர் கொலை வழக்கில், நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர்படுத்தப்பட்டார்.
28 வயதான ஆரம்பப் பள்ளி ஆசிரியரான சபீனா நெஸ்ஸா தெற்கு லண்டனில் அவரது வீட்டுக்கு அருகே உள்ள பூங்காவில் கொலை செய்யப்பட்டு, சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
சபீனாவின் மரணம் தெற்கு லண்டனில் பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் விமர்சனங்களை எழுப்பியது. சபீனாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள் தாமாக முன்வந்து பேரணிகளில் கலந்து கொண்டனர்.
அஞ்சலிப் பேரணியில் பங்கேற்ற சபீனாவின் சகோதரி ஜபினா கூறும்போது, ''எங்களால் இந்தத் துயரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நாங்கள் கெட்ட கனவில் சிக்கிக் கொண்டிருப்பதுபோல் உள்ளது. எங்கள் உலகம் இடிந்துவிட்டது. எந்தக் குடும்பமும் நாங்கள் அனுபவிக்கும் நிலையை அனுபவிக்கக் கூடாது'' என்று தெரிவித்தார்.
சபீனாவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டு, குற்றவாளியை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சபீனாவைக் கொலை செய்ததாக, 36 வயதான கோசி செலாமஜ் என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் அவர் உணவு டெலிவரி செய்பவர் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.