

அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு நடுவே ரஷ்யாவிடமிருந்து மீண்டும் ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ரஷ்யாவிடமிருந்து இரண்டாவது முறையாக ஏவுகணைகளை வாங்க துருக்கி முடிவு செய்துள்ளது. துருக்கியின் இம்முடிவுக்கு அமெரிக்கா முன்னரே எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும், ரஷ்ய ஏவுகணைகள் பாதுகாப்புக்கு அச்சம் தரும் வகையில் உள்ளன என்று அமெரிக்கா தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்தது. இதையும் மீறி முதல் முறை ரஷ்யாவிடமிருந்து துருக்கி, எஸ் 400 ஏவுகணைகளை வாங்கியது. இந்த நிலையில் மீண்டும் ரஷ்யாவிடமிருந்து ஏவுகணையை வாங்க துருக்கி அதிபர் எர்டோகன் முடிவு எடுத்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை (செப்டம்பர் 29) ரஷ்ய அதிபர் புதினை, துருக்கி அதிபர் எர்டோகன் சந்திக்கிறார். இதுகுறித்து எர்டோகன் கூறும்போது, “ஆம். துருக்கி தனது பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சுயமாக முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கியதற்காக துருக்கி மீதும், அதன் முக்கிய அதிகாரிகள் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. இந்த விவகாரம் காரணமாக துருக்கி - அமெரிக்கா உறவில் விரிசல் வலுவடைந்தது. சிரியாவில் குர்து போராளிகளுக்கு எதிரான துருக்கியின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முட்டுக்கட்டை போட்டது குறிப்பிடத்தக்கது.