

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது மூட்டை வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பிரான்ஸின் லியோனில் நகரில் நடந்த சர்வதேச உணவு வர்த்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மீது முட்டை வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மக்ரோனின் பாதுகாவலர்கள் அந்த மர்ம நபரிடமிருந்து மக்ரோனைக் காப்பாற்றினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மக்ரோன் கூறும்போது, “அவர் என்னிடம் ஏதாவது கூற வருகிறார் என்றால் கூறவிடுங்கள்” என்றார். எனினும் பாதுகாவலர்கள் அந்த நபரை வெளியேற்றினர். அந்த நபர் மக்ரோன் மீது எதற்கு முட்டை வீசினார் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.
முன்னதாக, ஜூன் மாதத்தில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன், த்ரோம் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்தார். பள்ளியைப் பார்வையிட்டுத் திரும்பியபோது அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி மக்ரோன் கை குலுக்கச் சென்றார். அப்போது அங்கிருந்த நபர், மக்ரோனின் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.