Published : 28 Sep 2021 02:47 PM
Last Updated : 28 Sep 2021 02:47 PM

ஆயுத சோதனை எங்கள் உரிமை; அதை யாரும் தடுக்க முடியாது: வட கொரியா

ஏவுகணை, அணு ஆயுதங்கள் என பல்வேறு ஆயுத சோதனைகளையும் தொடர்ந்து நடத்திவரும் வட கொரியா, ஆயுத சோதனை நடத்துவது எங்களின் உரிமை அதை யாரும் தடுக்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா பொதுச் சபை வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய வடகொரிய பிரதிநிதி கிம் சாங், நாங்கள் எங்களது தேசிய பாதுகாப்புக் கட்டமைப்பை வலுப்படுத்துவே ஆயுத சோதனைகளை மேற்கொள்கிறோம். அதன் மூலம் எங்கள் தேசத்தைப் பாதுகாக்கிறோம் என்று கூறினார்.

முன்னதாக ஐ.நா வருடாந்திர பொதுச் சபை கூட்டத்தில் பேசிய தென் கொரிய அதிபர் மூன் ஜே, 71 ஆண்டுகளுக்கு முன் கொரியாவில் ஏற்பட்ட மோதலுக்கு முடிவு கொண்டுவரப்பட வேண்டும். வட கொரியா, அணு ஆயுதங்களை விடுத்து பூரண அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சகோதரியான கிம் யோ ஜோங் கூறியிருந்தார்.

ஆனால், தற்போது வட கொரியா சார்பில் பேசியுள்ள அந்நாட்டுப் பிரதிநிதி கிம் சாங், ஆயுத சோதனை எங்கள் உரிமை என்று கூறியுள்ளார்.
தென் கொரிய கடலின் கிழக்குப் பகுதியை நோக்கி வடகொரியாவிலிருந்து இன்னெதன குறிப்பிட்டு சொல்ல இயலாத ஏவுகணை போன்ற பொருள் ஏவப்பட்டதாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது.

வட கொரியாவும்; ஆயுதச் சோதனை பின்னணியும்:

ஒன்றுபட்ட கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு, 1945-ல் கொரியா விடுதலை பெற்றது. அதன் பின்னர் வட பகுதி கொரியாவில் சோவியத் நாடும், தென் பகுதி கொரியாவில் அமெரிக்காவும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது.

1950 களில் தொடங்கிய கொரிய போர் மூன்று வருடங்கள் நீடித்தது. 1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் மூன்றே ஆண்டுகளில் இந்த போரில் 25 லட்சம் பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவானது.

இந்நிலையில், இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமுகமான சூழல் உருவாகவில்லை. தென் கொரியாவை இன்னும் அமெரிக்கா ஆட்டிவைப்பதாகக் கூறும் வட கொரியா அதனாலேயே பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை சோதிப்பதாகவும் கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x