Last Updated : 28 Sep, 2021 01:47 PM

 

Published : 28 Sep 2021 01:47 PM
Last Updated : 28 Sep 2021 01:47 PM

எல்லைப் பகுதிகளில் வாகனங்களைப் பாகுபாடின்றி சோதனை மேற்கொள்ள வேண்டும்: காரைக்கால் ஆட்சியர் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வாகன சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

 காரைக்கால்

புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், காரைக்கால் மாவட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் எவ்விதப் பாகுபாடுமின்றி வாகனங்களை சோதனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மாவட்ட எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 9 சோதனைச் சாவடிகளிலும் வருவாய்த்துறை ஊழியர்கள், ஆசிரியர்களைக் கொண்ட ஏழு பறக்கும் படையினர் வாகனங்களைச் சோதனையிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல் துறையினருடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு ஆலோசனைகள் கூறவும், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கவும், மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா தலைமையில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் இன்று (செப்.28) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசும்போது, ''மாவட்டத்துக்குள் சந்தேகப்படும்படி வரும் வாகனங்களைத் தீவிரமாகக் கண்காணித்து சோதனை செய்ய வேண்டும். வாகனங்களை சோதனை செய்வதில் எவ்விதப் பாகுபாடும் காட்டக் கூடாது.

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கம், மதுபானம், விலை உயர்ந்த பொருட்கள், வாக்காளர்களைக் கவரும் நோக்கில் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை குறித்துக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களையும், எல்லை சோதனைச் சாவடிகளைக் கடந்து நடந்து செல்வோரையும் கண்காணிக்க வேண்டும். தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம்'' என்று தெரிவித்தார்.

மாவட்டத் துணைத் தேர்தல் அதிகாரி எஸ்.பாஸ்கரன், சோதனைச்சாவடி நோடல் அதிகாரி செல்லமுத்து, சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளில் ஈடுபட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x