

க்ரீஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆகப் பதிவானது. க்ரீஸ் நாட்டின் தெற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தினால் ஒரே ஒருவர் உயிரிழந்தார். எத்தனை பேருக்குக் காயம் ஏற்பட்டது போன்ற முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக, ஐரோப்பிய மெடிட்டெரேனியன் சீஸ்மாலாஜிக்கல் சென்டர் (EMSC) நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டரில் 6.0 ஆகப் பதிவானதாகத் தெரிவித்தது. ஆனால், க்ரீஸ் 6.5 என்று தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையம் வடமேற்குப் பகுதியில் உள்ள ஆர்வியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் குறித்து க்ரீஸ் நாட்டு புவியியல் நிபுணர் கெரசிமோஸ் கூறுகையில், இது திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் இல்லை. கடந்த சில மாதங்களாகவே இந்தப் பகுதியில் டெக்டானிக் அதிர்வுகள் இருந்து வந்தது. இப்போது சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக தாக்கியுள்ளது. இதன் மையப்புள்ளி கடலுக்கு அடியில் இல்லாமல் நிலத்திற்குக் கீழ் இருந்ததால் சுனாமி போன்ற பாதிப்புகள் ஏற்படவில்லை என்றார்.
நிலநடுக்கத்தின் தாக்கம் ஹெர்கோலியன் பகுதியில் சற்று அதிகமாக இருந்தது. இதனால் அங்கு பள்ளிகள், கல்வி நிலையங்களில் குழந்தைகள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
கிரீஸில் கடந்த மார்ச் மாதம் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது.