எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது: ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி

எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது: ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி
Updated on
1 min read

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் அதில் வரும் பதிவுகளையோ பகிர்வுகளையோ நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிபராக இருந்த அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறினர்.

இந்நிலையில் ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் செய்தித்தாளில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

தனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து அஷ்ரப் கனி தனது ட்விட்டர் பக்கத்தில், எனது பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தை மீட்டெடுக்கும் வரையில் அதில் பதிவாகும் கருத்துகள் ஏதும் என்னுடையதல்ல என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கனிலிருந்து வெளியேறிய அஷ்ரப் கனிக்கு ஐக்கிய அரபு எமீரகம் மனிதாபிமான அடிப்படையில் ஆதரவு கொடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in