

சவுதி அரேபியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் முகமது அல் அப்து அல் அலி கூறியதாவது:
சவுதியில் புதிதாக 44 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 5 லட்சதுக்கு 35 ஆயிரத்து 950 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சவுதி அரேபியா கரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடும் சூழலை எட்டியுள்ளது. மக்களும் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் டெல்டா போன்ற உருமாறிய வைரஸ்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டி 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஜெர்மனி, ஃபிரான்ஸ், கனடா, இஸ்ரேல், ஜெர்மனி எனப் பல்வேறு நாடுகளும் மூன்றாவது டோஸ் தடுப்பூசிப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.
"இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும்" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
இதற்கிடையில், லேன்சட் மருத்துவ இதழ், "பொதுமக்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு இப்போதைக்கு அவசரம், அவசியம் இல்லை. இரண்டு டோஸ் கரோனா தடுப்பூசிகளே தேவையான அளவு பாதுகாப்பை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளது. மேலும் டெல்டா உள்ளிட்ட அனைத்து வகையான வேற்றுருவாக்கங்களுக்கும் எதிராக இரண்டு டோஸ் தடுப்பூசி திறம்பட செயல்படுகின்றன. ஒருவேளை பிரேக்த்ரூ இன்ஃபெக்ஷன் என்றளவில் இரண்டு டோஸ் போட்டவர்களுக்கு பாதிப்பு வந்தாலும் கூட தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை என்றும் அந்த மருத்துவ ஆய்வுக் கட்டுரையின் எழுத்தாளர்கள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.