Published : 27 Sep 2021 03:34 PM
Last Updated : 27 Sep 2021 03:34 PM

தலிபான் அரசை ஒருபோதும் ஆதரிக்க முடியாது: இத்தாலி கூறும் காரணம் என்ன?

தலிபான் அரசை ஆதரிக்கமாட்டோம் என திட்டவட்டமாகக் கூறியுள்ள இத்தாலி அரசு அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெறுகிறது. இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்று நாட்டின் பெயரை மாற்றியுள்ள தலிபான்கள் இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தின்படியே ஆட்சி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானை தனித்துவிடக் கூடாது. அவ்வாறு தனித்துவிட்டால் அது மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் வலியுறுத்திவருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தலிபான் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று இத்தாலி தெரிவித்துள்ளது.
இது குறித்து இத்தாலி வெளியுறவு அமைச்சர் லுய்கி டி மாயோ கூறியதாவது:

ஆப்கானிஸ்தானில் தற்போது தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளனர். இந்த ஆட்சியை ஏற்றுக் கொள்ளமுடியாது. தலிபான் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்கள் 17 பேர் ஐ.நா.வால் தேடப்படும் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள். மேலும், ஆப்கனில் தொடர்ந்து சிறுமிகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில் ஆப்கனில் அமைந்துள்ள தலிபான் ஆட்சியை அங்கீகரிக்க முடியாது.
ஆனால், ஆப்கன் மக்களுக்கு தொடர்ந்து நிதியுதவிகள் வழங்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி அங்கிருந்து நிறைய அகதிகளை வெளிநாடுகள் நோக்கி படையெடுக்கச் செய்யும். இதனால் அண்டை நாடுகளின் நிலைமையும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று கூறினார். ஜி20 மாநாட்டில் பேசியபோது இத்தாலி வெளியுறவு அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கன் மக்களுக்கான உதவிகளை நேரடியாக பணமாக ஆப்கானிஸ்தானிடம் கொடுத்தால் அது முறைகேடாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. அதனால், மக்களுக்கு தேவையான உணவு, மருந்து, உடைகள் இன்னும் பல பொருட்களாகவோ சேவைகளாகவோ உதவிகள் நீள வேண்டும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

சீனா ஆதரவு:

இதே ஜி20 மாநாட்டில், பேசிய வெளியுறவு அமைச்சர் வாங் யி, "ஆப்கனின் அந்நியச் செலாவணி அந்நாட்டின் சொத்து. அது அவர்களுக்கே சேர வேண்டும். ஆப்கன் மீதான பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விலக்கிக் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகள் ஆப்கன் அரசை அங்கீகரிக்க வேண்டும். ஆப்கனின் வெளிநாட்டு நிதி ஆதாரங்களை முடக்கி வைத்து அந்த நாட்டுக்கு அரசியல் அழுத்தம் தரக்கூடாது. அவர்களின் நிதியை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தக் கூடாது. ஆப்கன் மக்களுக்காக கூடுதலாக நிதியுதவி செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தான் நெருக்கடியில் இருக்கிறது. அதன் நெருக்கடி காலத்தில் மிக அவசரமானத் தேவைகளுக்கு நிதியை விடுவிக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் நிலவும் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் அதேவேளையில், ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளையும் கட்டுப்படுத்தி தனது வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

கடந்த வாரம் ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்ரேஸ் பத்திரிகைகளுக்கு அளித்தப் பேட்டியில், ஆப்கானிஸ்தானில் கடுமையான மனிதநேய நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதனால் ஐ.நா தலிபான்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஆப்கன் மக்களுக்கு உதவப்போகிறது என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x