மெங் வான்சோ
மெங் வான்சோ

கனடாவில் சிறைபிடிக்கப்பட்ட வாவே நிர்வாகி மெங் விடுதலை: 3 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்

Published on

வங்கி மோசடி விவகாரத்தில் சிறைபிடிக் கப்பட்ட வாவே நிறுவன நிர்வாகி மெங் வான்சோ 3 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ளார். சீனாவுக்கு திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வாவேவின் நிர்வாக அதிகாரியும் நிறுவனத் தலைவரின் மகளுமான மெங் வான்சோ வங்கி மோசடி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டு, 2018-ல் கனடாவில் சிறைபிடிக்கப்பட்டார். மேலும்ஈரான் மீதான பொருளாதார தடைகளைமீறியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்தக் குற்றங்களுக்காக அவரை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் வழக்கு தீவிரமாக நடந்து வந்தது. மெங் மீதான குற்றச்சாட்டுகளை வாவே நிறுவனமும் சீன அரசும் மறுத்து வந்தது. அவரை சிறைபிடித்தது சட்டவிரோதம் என்று கூறி தொடர்ந்த இந்த வழக்கில் சட்டப் போராட்டங்களையும் நிகழ்த்தி வந்தது.

இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஏற்பட்ட சமரச ஒப்பந்தத்தின்படி மெங் வான்சோவை கனடா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. அவருடைய பிரேஸ்லெட்டில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் ட்ராக்கரும் அகற்றப்பட்டது.

இதையடுத்து அரசு சிறப்பு விமானத்தில் கனடாவிலிருந்து சீனாவின் சென்ஜென் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு சீன அரசு அதிகாரிகள், வாவே நிறுவன நிர்வாகிகள் மற்றும் பலர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மெங் வான்சோவின் விடுதலை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும் வெற்றி யாகப் பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in