Published : 26 Sep 2021 01:28 PM
Last Updated : 26 Sep 2021 01:28 PM

குற்றவாளிகளின் கை, கால் துண்டிப்பு, பொது இடத்தில் மரண தண்டனை: தலிபான்களுக்கு அமெரிக்கா கண்டனம்

நெட் ப்ரைஸ் (இடது), நூருதீன் துராபி (வலது )

கடுமையான கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவோரின் கை, கால்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் தொடரும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறியதாவது:

தலிபான்கள் ஷரியத் சட்டத்தின் கீழ் மேற்கொண்டுள்ளோம் எனக் கூறி நிறைவேற்றும் தண்டனைகள் தெளிவாக மனித உரிமைகளை மீறுவதாக உள்ளன. தலிபான்களின் தண்டனை குறித்த அறிக்கை மட்டுமல்லாமல் அவர்களின் செயல்பாடுகளையும் நாங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். ஆப்கனில் உள்ள பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகளின் நலன் காக்க நாங்கள் துணை நிற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தலிபான் அமைப்பை நிறுவியர்களுள் ஒருவர் முல்லா நூருதீன் துராபி அண்மையில் அளித்த பேட்டியில், "தலிபான்களின் முந்தைய ஆட்சியின் போது தவறு செய்பவர்களுக்கு மைதானத்தில் தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதுவும் குற்றத்திற்கு ஏற்ப கை, கால்களை துண்டிக்கும் தண்டனைகள் வழங்கப்பட்டன.

நாங்கள் மைதானத்தில் தண்டனை அளிப்பதை அனைவரும் கேள்வி கேட்கின்றனர். நாங்கள் யாருடைய சட்டங்களையும், தண்டனைகளையும் கேள்வி கேட்டதில்லையே. எங்கள் சட்டம் எப்ப்டியிருக்க வேண்டும் என்று எங்களுக்கு யாரும் சொல்லித்தரத் தேவையில்லை. நாங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறோம். குரானின் அடிப்படையில் நாங்கள் எங்களின் சட்டத்திட்டங்களை வகுக்கிறோம்.

எங்களின் செயல்பாடுகள் நாங்கள் அமெரிக்கர்கள் போல் அல்ல என்பதைக் காட்டும். நாங்கள் மனித உரிமைகளுக்காக நிற்கிறோம் எனக் கூறும் அமெரிக்கர்கள் மோசமான குற்றங்களைச் செய்வார்கள். நாங்கள் அப்படியல்ல. இஸ்லாம் சட்டங்களுக்கு உட்பட்டு தண்டனைகள் வழங்குகிறோம். கைகளைத் துண்டிப்பது பற்றி பல்வேறு விமர்சனங்களும் நிலவுகின்றன. ஆனால், கைகளைத் துண்டிப்பதால் அந்த நபர் அதே குற்றத்தை மீண்டும் செய்ய மாட்டார்.

இப்போது ஆப்கன் மக்கள் மத்தியில் ஊழல் மலிந்துள்ளது. பணத்தை அபகரிப்பது போன்ற பழக்கமும் உருவாகியுள்ளது. எங்கள் தண்டனை முறை அமைதியையும் நிலையான தன்மையையும் கொண்டு வரும். நாங்கள் எங்கள் சட்டதிட்டங்களை அமல்படுத்திய பின்னர் அதனை யாரும் உடைக்க நினைக்க முடியாது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஆப்கனில் ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தலிபான்கள், இனியும் யாரும் ஆள்கடத்தல் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்பதை அறிவிக்கும் வகையில் இறந்த நால்வரின் உடல்களை ஹெராத்தில் உள்ள பரபரப்பான வீதிகளில் தொடங்கவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x