Published : 26 Sep 2021 03:24 AM
Last Updated : 26 Sep 2021 03:24 AM

அமெரிக்க அதிபர் பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசித்து வருவது உறுதி: ஆதாரங்களை அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி

வாஷிங்டன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின்உறவினர்கள் இந்தியாவில் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள் ளது. இதுதொடர்பான ஆதாரங் களை பைடனிடம் பிரதமர் நரேந்திர மோடி அளித்தார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் தாயார் கேத்தரின் ஜுன் அயர்லாந்தை சேர்ந்தவர். அவரது தந்தை ஜோசப் பைடன், அயர்லாந்து, பிரிட்டன், பிரெஞ்சு வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன் பதவி வகித்தபோது இந்தியாவுக்கு வந்தார்.

அப்போது அவர் சுவாரசிய தகவல் ஒன்றை கூறினார். “எனது மூதாதையரான கேப்டன் ஜார்ஜ் பைடன் பிரிட்டனின் கிழக்கு இந்திய கம்பெனியில் பணியாற்றி உள்ளார். பழங்காலத்தில் பிரிட்டனுக்கும் அயர்லாந்துக்கும் இடையே மோதல் இருந்தது. அந்த வகையில் எனது மூதாதையரான அயர்லாந்துகாரர், பிரிட்டிஷ் நிறுவனத்தில் பணியாற்றியதை ஏற்றுக்கொள்வது கொஞ்சம் கடினம்தான். இந்தியாவில் அவர் பணியாற்றியபோது இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நான் முதல்முறையாக செனட் எம்.பி.யாக பதவியேற்றபோது மும்பையில் இருந்து எனக்கு பாராட்டு கடிதம் வந்தது. அதை எழுதியவர் பைடன். எனது பணிச்சுமை காரணமாக அந்த கடிதத்தை எழுதியவரை தேடாமல் விட்டுவிட்டேன்” என்றார்.

அப்போது, மும்பை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 5-க்கும் மேற்பட்ட பைடன்கள் வசிக்கின்றனர் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

இந்நிலையில், அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஜோ பைடனை சந்தித்துப் பேசினார். அப்போது பைடன் மீண்டும் தனது இந்திய தொடர்பை நினைவுகூர்ந்தார். "எனது இந்திய தொடர்பு குறித்து மோடிதான் தீர்வு காண வேண்டும். இந்த சந்திப்பின் நோக்கமே எனதுகுடும்பத்தின் இந்திய பூர்வீகத்தைகண்டுபிடிப்பதுதான்" என்று பைடன் நகைச்சுவையாக கூறினார்.

இதற்கு பதிலளித்த மோடி, பைடனின் மும்பை தொடர்பு குறித்து விசாரித்து, முக்கிய ஆவணங்களை கொண்டுவந்துள்ளேன் என்றார். ஆச்சரியத்தில் ஆழ்ந்த பைடன், அப்படியென்றால் நாம் உறவினர்களா என்று உரிமையோடு கேட்டார். இதை ஆமோதித்த மோடி, ‘‘நான் கொண்டு வந்துள்ள ஆவணங்கள் பைடனுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து மேலும் விசாரிக்கலாம்" என்று பதிலளித்தார்.

மோடி அளித்த ஆவணங்களின் மூலம் ஜோ பைடனின் உறவினர்கள் இந்தியாவில் வசிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பைடனின் குடும்ப பூர்வீகம் குறித்த மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x