

இந்திய அமெரிக்க உறவு பல்வேறு சர்வதேச பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். பெரு நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு, துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.
இந்த சந்திப்பு குறித்து ஜோ பைடன் கூறியதாவது:
இந்திய அமெரிக்க உறவு உறவு பல்வேறு சர்வதேச பிரச்சினைகளுக்கும் தீர்வு காண உதவும் என நான் எப்போதுமே தீர்க்கமாக நம்புகிறேன். 2006ல் நான் துணை அதிபராக இருந்தபோது 2020ல் இந்தியாவும் அமெரிக்காவும் உலகிலேயே மிக நெருக்கமான நாடாக இருக்கும் எனக் கூறியிருந்தேன். இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு எப்போதும் வலுவானதாக இருக்கும். கரோனா தடுப்பில் இன்னும் ஒருங்கிணைந்து எப்படிச் செயல்படலாம் என நாம் யோசிக்க வேண்டும். அதேபோல் காலநிலை மாற்றம், இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பிலும் இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தொழில்நுட்பம் உலகை ஆளும் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் தொழில்நுட்பத்தை சர்வதேச நலனுக்காகப் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.