Published : 24 Sep 2021 07:38 PM
Last Updated : 24 Sep 2021 07:38 PM

தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்:  வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி விதித்த நிபந்தனைகள் என்னென்ன?

தென் கொரியாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறும் வட கொரிய அதிபர் கிம்மின் சகோதரி அதற்காக சில நிபந்தனைகளை முன்வைக்கிறார்.

வட கொரியாவில் அதிபர் கிம் ஜோங் உன் தான் அனைத்து அதிகாரங்களும் கொண்ட தலைவர். அவருக்கு அடுத்தபடியாக அங்கே அதிகாரம் கொண்டவர் அவரின் சகோதரி கிம் யோ ஜோங்.

வட கொரியா அண்மையில் ஏவுகணை சோதனை செய்தது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் நடந்த முதல் சோதனை அது. இந்தச் சோதனை வட கொரியா நாங்கள் தொடர்ந்து எங்கள் படை பலத்தை அதிகரிப்போம் என்று உலகுக்கு அனுப்பிய செய்தி என்று நிபுணர்கள் கூறினர்.
இந்நிலையில் தான் கிம்மின் சகோதரி தென் கொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

கொரியப் போருக்கு ஒரு முடிவுகட்ட தென் கொரியா முன்வந்துள்ளதில் மகிழ்ச்சி. ஆனால் அதற்கு முதலில் அவர்கள் வடகொரியா மீதான வெறுப்புணர்வுக் கொள்கைகளை விட்டொழிக்க வேண்டும்.
போர் நிறுத்தப் பிரகடனம் சாத்தியப்பட, பரஸ்பரம் இரு தரப்பும் ஒருவொருக்கொருவர் மரியாதை கொள்ள வேண்டும். முன்முடிவுகளுடன் கூடிய பார்வையை கைவிட வேண்டும். அதேபோல் இரட்டைக் கொள்கைகளை முதலில் கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ஐ.நா வருடாந்திர பொதுச் சபை கூட்டத்தில் பேசிய தென் கொரிய அதிபர் மூன் ஜே, 71 ஆண்டுகளுக்கு முன் கொரியாவில் ஏற்பட்ட மோதலுக்கு முடிவு கொண்டுவரப்பட வேண்டும். அணு ஆயுதங்களை விடுத்து பூரண அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

கொரிய பதற்றத்தின் பின்னணி:

ஒன்றுபட்ட கொரியா ஜப்பானின் ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் சரணடைந்த பிறகு, 1945-ல் கொரியா விடுதலை பெற்றது. அதன் பின்னர் வட பகுதி கொரியாவில் சோவியத் நாடும், தென் பகுதி கொரியாவில் அமெரிக்காவும் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்தின. இரு ஆதிக்க நாடுகள் இடையிலான பனிப்போர், கொரியாவில் பெரும் சண்டையாக வெடித்தது. 1950 களில் தொடங்கிய கொரிய போர் மூன்று வருடங்கள் நீடித்தது. 1953-ல் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் மூன்றே ஆண்டுகளில் இந்த போரில் 25 லட்சம் பொது மக்கள் கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக வட கொரியா மற்றும் தென் கொரியா என இரண்டு நாடுகள் உருவானது. இந்நிலையில், இத்தனை ஆண்டுகளாகியும் இன்னும் இரண்டு நாடுகளுக்கும் இடையே சுமுகமான சூழல் உருவாகவில்லை. தென் கொரியாவை இன்னும் அமெரிக்கா ஆட்டிவைப்பதாகக் கூறும் வட கொரியா அதனாலேயே பாதுகாப்புக்காக அணு ஆயுதங்களை சோதிப்பதாகவும் கூறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x