

மும்பை-அகமதாபாத் விரைவு ரயில் திட்டம் (எம்ஏஹெச்எஸ்ஆர்) குறித்த காலத்துக்குள், விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா உறுதியளித்தார்.
பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக நேற்று அமெரிக்கா சென்றடைந்தார். அதிபர் ஜோ பிடன், துணை அதிபர் கமலா ஹாரிஸுடன் சந்திப்பு, ஐ.நா. பொதுக்கூட்டத்தில் உரையாற்றுதல், குவாட் மாநாட்டில் பங்கேற்பு, பெரு நிறுவனத் தலைவர்களுடன் சந்திப்பு என பல நிகழ்ச்சிகளி்ல் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
குவாட் மாநாட்டில் இதுவரை பிரதமர் மோடி நேரடியாகப் பங்கேற்றது இல்லை. ஆனால், முதல்முறையாக நேரடியாகப் பங்கேற்ற பிரதமர் என்ற பெருமையைப் பெற்றார். ஜப்பான் பிரதமர் சுகாவும், பிரதமர் மோடியும் நேரடியாக முதன்முறையாக நேற்றுச் சந்தித்துப் பேசினர். ஜப்பான் பிரதமராக சுகா பதவி ஏற்றபின் பிரதமர் மோடியுடன் நடத்தும் முதல் சந்திப்பு இதுவாகும்.
ஜப்பான் பிரதமர் சுகாவுடன் பிரதமர் மோடி சந்தித்தது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இரு நாட்டு தலைவர்களும் இரு தரப்பு நாட்டுபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பாதுகாப்பு தளவாடங்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை கூட்டாக மேம்படுத்துவது குறித்து ஒப்புக்கொண்டனர். இரு பிரதமர்களும் நேரடியாக முதன்முறையாகச் சந்தித்தது குறித்து பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரு தலைவர்களும் தொலைப்பேசி வாயிலாகப் பேசினர் அதன்பின் இப்போதுதான் முதல்முறையாக நேரடியாகச் சந்தித்தனர். ஜப்பான் நாடு வெற்றிகரமாக டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியை நடத்தி முடித்தமைக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, ஜப்பான் உதவியுடன் மேற்கொள்ளப்படும் மும்பை-அகமதாபாத் ஸ்பீட் ரயில் திட்டத்தை விரைந்து குறித்த காலத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இரு பிரதமர்களும் உறுதியளித்தனர்.
இந்திய பசிபிக் பிராந்தியத்தில் சுதந்திரமான, தடைகளற்ற பயணத்துக்கு இரு தரப்பு நாடுகளும் துணையாக இருக்கும் என இரு தலைவர்களும் உறுதியளித்தனர். ஆப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், அங்குள்ள அரசியல் சூழல் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம், வர்த்தக உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருவது குறித்து இரு பிரதமர்களும் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்தனர்.
உற்பத்தித்துறை, சிறு,குறு,நடுத்தரத் தொழில்கள், திறன்மேம்பாடு ஆகியவற்றில் இரு தரப்பு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். குறிப்பிட்ட திறன்மிக்க தொழிலார்கள் ஒப்பந்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ளது, இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2022-ம்ஆண்டு தொடக்கத்தில் திறன் மற்றும் மொழித்தேர்வு நடத்தப்படும் என பிரதமர் சுகா தெரிவித்தார்.
கரோனா வைரஸ் பரவல், தடுப்பு முறைகள், தடுப்பூசி முறைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். இந்தியா-ஜப்பான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது குறித்தும் முக்கியத்துவம் அளிப்பது குறித்தும், குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். பருவநிலை மாறுபாடு, புதுப்பிக்கதக்க எரிசக்தி, ஆகியவை குறித்தும், தேசிய ஹைட்ரஜன் எரிசக்தி இயக்கத்தில் ஜப்பானுடன் இந்தியா இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது