ஐபோன் வாங்குவதற்காக கைக்குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்குச் சிறை

ஐபோன் வாங்குவதற்காக கைக்குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்குச் சிறை
Updated on
1 min read

ஐபோன் வாங்குவதற்காக பிறந்து 18 நாட்களேயான பெண் குழந்தையை விற்ற சீன தம்பதியினருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆப்பிள் ஐபோன் வாங்குவதற்காக 18 நாட்களான பெண் குழந்தையை 3,530 டாலர்களுக்கு இந்தத் தம்பதியினர் விற்றுள்ளனர். சீனாவின் பியூஜியான் மாகாணத்தில் நடந்த இந்தச் சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையின் தாய் சியாவோ மேய் என்பவர் நிறைய பகுதி நேர வேலைகளைச் செய்து வருகிறார். தந்தை துவான் எப்போதும் இண்டெர்நெட் கஃபேக்களில் நேரத்தை செலவிட்டு வருபவர்.

சமூகவலைத்தளம் QQ-வில் கொடுத்த விளம்பரத்தை அடுத்து ஒருவர் குழந்தையை வாங்க முன் வந்தார். அவர் 23,000 யுவான்கள் தொகையை இவரிடம் அளித்துள்ளார்.

இந்தத் தொகையைக் கொண்டு ஐபோன் மற்றும் மோட்டார் பைக் ஒன்றை வாங்க அவர் திட்டமிட்டிருந்தார்.

இருவரும் 2013-ம் ஆண்டு சந்தித்து காதல் வலையில் விழுந்தனர். இவர்கள் இருவருமே திருமண வயதை எட்டாத நிலையில் உறவு மலர்ந்ததில் சியாவோ மேய் கருத்தரித்துள்ளார். இருவருக்குமே 19 வயதுதான் ஆகிறது. இதனையடுத்து இந்தக் குழந்தையினால் சுமைதான் அதிகமாகும் என்று இருவரும் முடிவெடுத்தனர்.

குழந்தையை விற்றவுடன் சியாவோ மேய் தலைமறைவானார், ஆனால் போலீஸ் இவரை கண்டு பிடித்து விசாரித்து வருகிறது.

விசாரணையில் மேய் கூறும்போது, “நானே தத்து எடுக்கப்பட்டவள்தான், எனது ஊரில் குழந்தைகளை வளர்க்க பிறரிடம் விடப்படுவதுண்டு. எனவே எனக்கு இது சட்ட விரோதம் என்று தெரியாது” என்றார்.

ஆனால் சட்டம் இதனை ஏற்குமா? தாய்க்கு இரண்டரை ஆண்டுகளும், தந்தைக்கு 3 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

சீனாவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 2 லட்சம் குழந்தைகள் கடத்தப்பட்டு ஆன்லைன் மூலம் விற்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் சீன அரசு கடுமை காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in