தலிபான் ஆட்சியின் கோர முகத்தைக் காணும் ஆப்கன் மக்கள்

தலிபான் ஆட்சியின் கோர முகத்தைக் காணும் ஆப்கன் மக்கள்
Updated on
1 min read

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அன்றாடம் அதன் கோர முகத்தைக் காண்பதாகக் கூறுகின்றனர் அந்நாட்டு மக்கள். சாலைகளில் பொதுமக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.

தலிபான் எதிர்ப்புக் குழுவினர், முந்தைய ஆட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேடித்தேடி பழி தீர்க்கப்படுகின்றனர். தலிபான்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பெண்கள் கசையடிக்கு உள்ளாகின்றனர்.

அமைச்சரவையை தலிபான்கள் அறிவித்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில், மக்கள் மீது சிறிதும் கருணை இல்லாமல் நடந்துகொள்வதாக பல்வேறு ஊடகத் தகவல்களும் தெரிவிக்கின்றன. பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டோம் என தலிபான்கள் கூறினாலும் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தலிபான்களின் கடைசி எதிர்ப்புக்குழுவினரைக் கட்டுப்படுத்துவதில் அவர்கள் இரக்கமின்றி நடந்துகொண்டதாக பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு பொதுமக்கள் கூறுகின்றனர். ஏபிசி செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஓர் இளைஞர், எனது குடும்பம் ஐந்து முறை தாக்கப்பட்டது என்றார். இன்னொரு இளைஞர், தலிபான்கள் வீடுவீடாக தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் எங்கள் பகுதி மக்களின் செல்போனை எடுத்து சோதனை செய்வார்கள். அதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்படும்படி ஏதேனும் இருந்தால், உடனே கொலை செய்துவிடுகின்றனர். நாங்கள் உயிருக்கு அஞ்சி வாழ்கிறோம் என்று கூறினார்.

தலிபான் ஆட்சி அமைந்தபோது அதன் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் அளித்தப் பேட்டியில், "தலிபான் தீவிரவாதிகள் பெண்கள் உரிமையை வழங்கும். பெண்கள் சுகாதாரத் துறையில் பணியாற்றலாம். வேறு எங்கு பெண்களின் தேவை இருக்கிறதோ அங்கெல்லாம் அவர்கள் பணியாற்றலாம். பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்டப்படாது" என்று கூறினார்.

ஆனால், அவர் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாகவே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் உள்ளன. 2001க்கு முன்னதாக, தலிபான் ஆட்சியின் போது பொது இடங்களில் படுகொலைகள், சிறு தவறுக்கும் கை, கால் என அங்கங்களைத் துண்டித்தல், கற்களால் அடித்தே கொலை செய்தல் போன்ற வன்முறைகள் நடந்தன. எங்கே அவை மீண்டும் நடைபெறுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கன் மக்கள் கூறுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in