

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று அந்நாட்டின் 5 முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை இன்று சந்தித்து பேசுகின்றார்.
குவாட் மாநாடு, ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்துள்ளார். அவருக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி இன்று மாலை 7 மணிக்கு வாஷிங்டனில் உலகளாவிய மிகப்பெரிய தொழில் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் குவால்காம் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ்டியானோ, அடோப் நிர்வாகி சாந்தனு நாராயண், பர்ஸ்ட் சோலார் நிர்வாகி மார்க் விட்மர், ஜெனரல் ஆட்மோமிக்ஸ் அதிகாரி விவேக் லால் மற்றும் பிளாக்ஸ்டோனில் தலைமை நிர்வாக அதிகாரி டீபன் ஏ ஸ்வார்ஸ்மேன் ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். இதில் சாந்தனு நாராயண் மற்றும் விவேக் லால் இந்திய அமெரிக்கர்கள் ஆவார்.
பிரதமர் மோடி இரண்டாவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை சந்தித்து பேசுகிறார். பிரதமர் மோடி கடந்த வாரம் ஏற்கெனவே ஸ்காட் மோரிசனுடன் தொலைபேசியில் பேசினார். இதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்தியா- ஆஸ்திரேலியா விரிவான கூட்டாண்மை குறித்து பேசுகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 12 அன்று, பிரதமர் மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஆகியோரும் காணொலி வாயிலாக இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரதமர் மோடியின் இன்றைய சந்திப்பில் மிக முக்கியமான நிகழ்வு அமெரிக்க துணை அதிபரும் இந்திய-அமெரிக்கருமான கமலா ஹாரிஸை சந்தித்து பேசுவதாகும். இது இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல்முறை நடைபெறும் நேரடி சந்திப்பு ஆகும்.
இந்தியாவில் கோவிட் -19 கொடிய பாதிப்பு காணப்பட்ட ஜூன் மாதம் கமலா ஹாரிஸ் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியிருந்தனர். அதன் தொடர்ச்சியாக இந்த சந்திப்பு நடைபெறுகிறது. பின்னர் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை நாளை சந்தித்து பேசுகிறார்.
அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில் ஜோபைடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தேர்வானதற்கு பிறகு பிரதமர் மோடி இதுவரை ஜோபைடன், கமலா ஹாரிசை சந்திக்கவில்லை.