

சீனாவின் வடகிழக்கு நகரமான ஹார்பினில் திடீரென கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அங்கு பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்பின் நகரின் மொத்த மக்கள் தொகை 10 மில்லியன். இங்கு கடைசியாக பிப்ரவரி மாதம் கரோனா தொற்று பதிவானது. தற்போது, அங்கு 16 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.
ஹர்பின் நகரில் குளிர் அதிகம். மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவில் பதிவாகும். இப்போது அங்கு கடும் குளிர்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில் அங்கு புதிதாக 16 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் ஹர்பின் நகர மக்கள் மிகமிக அத்தியாவசியத் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது. அவ்வாறாக வெளியேறுபவர்கள் 48 மணி நேரத்துக்குப் பின் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், அழகுசாதன மையங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்களில் வழக்கத்தைவிட பாதி அளவிலேயே மக்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உயர்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஃபுஜியான் நகரில் தொற்று ஏற்பட்டதற்கும் தற்போது ஹர்பின் நகரில் தொற்று பதிவானதற்கும் தொடர்பு இருக்கிறதா என்று ஆராயப்பட்டு வருகிறது.