

ஹவானா சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்ட அமெரிக்க தூதரக, உளவு அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு அளிக்கும் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகள், தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர், அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் அதிகாரிகளுக்கு மட்டுமே ஏற்படும் ஹவானா சிண்ட்ரோம் சமீப காலம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹவானா சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்ட அமெரிக்க தூதரக, உளவு அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு அளிக்கும் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.
அதென்ன ஹவானா சிண்ட்ரோம்?
முதன்முதலில் கடந்த 2016 ஆம் ஆண்டு தான் இந்த ஹவானா சிண்ட்ரோம் கண்டறியப்பட்டது. கியூபாவில் பணியாற்றிவந்த அமெரிக்க தூதர்களுக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டது. அதேபோல், 2018ல் சீனாவில் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு ஹவானா சிண்ட்ரோம் கண்டறியப்பட்டது. தொடர்ச்சியாக ரஷ்யா, தஜிகிஸ்தான், ஆஸ்திரிய என பல நாடுகளிலும் பணியாற்றிய அமெரிக்க தூதரக அதிகாரிகளும், சிஐஏ உளவு அமைப்பினரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர்.
ஹவானா சிண்ட்ரோம் ஏற்பட்டவர்களுக்கு தலைவலி, கடுமையான உடல் சோர்வு, தலை சுற்றல், குமட்டல், தூக்கமின்மை, காது கேளாமை போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட தூதரக அதிகாரி ஒருவர் இன்றளவும் செவித்திறன் இயந்திரத்தைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில மருத்துவ அறிக்கைகளின்படி ஹவானா சிண்ட்ரோம் மூலம் நிரந்தர மூளை பாதிப்பும் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஹவானா சிண்ட்ரோம் எப்படி ஏற்படுகிறது?
ஹவானா சிண்ட்ரோம் எப்படி ஏற்படுகிறது? என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மைக்ரோஅலையால் இந்த பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதாவாது சோனிக் அட்டாக் எனப்படும் தாக்குதலால் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது. ஆனால், இன்னும் சில ஆய்வுகளோ இப்படி ஒரு பாதிப்பே இல்லை. இது மனப்பதற்றத்தின் விளைவு எனக் கூறுகிறது. அல்ட்ராசவுண்ட், அல்ட்ராசோனிக் சின்னல்களால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்றும், பூச்சிக்கொல்லிகள், கிரிக்கெட் பூச்சிகளாலும் கூட பாதிப்பு ஏற்படலாம் எனப் பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன.
அமெரிக்கா சட்டம்:
எதுவாக இருந்தாலும் சரியென்று, ஹவானா சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்ட அமெரிக்க தூதரக, உளவு அதிகாரிகள் அவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு அளிக்கும் சட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றம் ஏகமனதாக நிறைவேற்றியுள்ளது.