

தலிபான்களுக்கு அஞ்சி ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பெண் நீதிபதிகள் வெளியுலகிலிருந்து மறைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தானின் ஆட்சிமுறை முழுக்க முழுக்க இஸ்லாமியச் சட்டப்படியே நடக்கும் என தலிபான்கள் பிரகடனம் செய்துள்ளனர்.
இந்நிலையில், அங்கு அமைந்துள்ள இடைக்கால அரசில் ஒரேயொரு பெண் கூட இடம்பெறவில்லை. பெண்களுக்கு அரசியலில் இடமில்லை என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டனர்.
இத்தகைய சூழலில் ஆப்கானிஸ்தானின் முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்பட்ட பெண் நீதிபதிகள் பலர் தற்போது உயிருக்கு அஞ்சி வெளியுலகிலிருந்து விலகி வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பெண் நீதிபதிகள் பெரும்பாலும் தலிபான்கள் மீதான பாலியல் குற்ற வழக்குகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொலைச் சம்பவங்கள், குடும்ப வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றை விசாரித்துத் தண்டனை வழங்கியவர்களாவர்.
ஆப்கனில் தலிபான்களின் ஆட்சி அமைந்தவுடனேயே பல பெண் நீதிபதிகள் நாட்டைவிட்டு வெளியேறினர். ஆனால், அவ்வாறு வெளியேற முடியாத சிலர் தற்போது உயிருக்கு அஞ்சி வாழ்கின்றனர். ஒரு பெண் நீதிபதி, தி கம்மா பிரெஸ் நியூஸ் ஏஜென்சிக்கு பெயர் தெரிவிக்காமல் அளித்த பேட்டியில், என்னைப் போன்ற பெண் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் எல்லோரும் தலிபான்கள் பழி தீர்க்கப்படலாம் என்ற அச்சத்தில் வாழ்கிறோம் என்று கூறினார்.
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள புல் இ சர்கி சிறைச்சாலையில் மிகவும் மோசமான தீவிரவாதிகளை அடைத்துவைக்கப்பட்டிருந்தனர். ஆனால், தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சிறைக்கைதிகளை விடுவித்தனர். இப்போது அங்கு போதைக் கடத்தல் குற்றவாளிகள் மட்டுமே உள்ளனர். புல் இ சர்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் தலிபான்களே. அவர்கள் சிறை செல்ல காரணமாக இருந்ததாலேயே தீர்ப்பெழுதிய நீதிபதிகள் தற்போது கவலை கொண்டுள்ளனர்.
இன்னொரு பெண் நீதிபதி ஒருவர் கூறுகையில், "என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. ஆப்கனில் நீதிபதியாவது ஒரு பெண்ணுக்கு அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆனாலும் என்னைப்போன்றோர் அந்தப் பதவியை அடைந்தோம். இப்போது தலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டனர். எங்களின் வேலை பறிபோனது. சுதந்திரத்தை இழந்தோம். உயிராவது பிழைப்போமா என்று தெரியவில்லை. பெண்கள் நீதிபதிகளாக இருப்பது இஸ்லாமியக் கோட்பாட்டுக்கு எதிரானது என அவர்கள் நம்புகின்றனர். அதனால் எப்போது வேண்டுமானாலும் யாரேனும் ஒரு தலிபான் வீட்டினுள் நுழைந்து என்னைச் சுட்டுக் கொல்லலாம் என பயந்து வாழ்கிறேன்" என்று கூறியுள்ளார்.