

அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியைக் கொடுக்காவிட்டால் ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலிபான்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டன் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராக தலிபான்கள் போராடிவந்தனர். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததது. அதிபராக இருந்த அஷ்ரப் கனி நாட்டைவிட்டு வெளியேறினார். பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் 70க்கும் மேற்பட்டோர் கொண்ட இடைக்கால அரசை தலிபான்கள் அறிவித்தனர். இதில் அனைவருமே ஆண்கள். பெண்களுக்கு அரசியலில் இடமில்லை என தலிபான்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல் மத சிறுபான்மையினருக்கோ, மொழி வாரியான குழுவினருக்கோ அரசாட்சியில் இடம் தரப்படவில்லை. புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஹக்கானிகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆபாகானிஸ்தானில் அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி அமைய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இது தொடர்பாக பிரிட்டன் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "தலிபான்கள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும், ஆப்கன் மண்னை பிற தீவிரவாத அமைப்புகள் அண்டைநாடுகள் குறிப்பாக பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு எதிராகப் பயன்படுத்தாமல் தடுக்க வேண்டும். அனைவரையும் உள்ளடக்கிய ஆடசியை நல்க வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் உள்நாட்டுப் போர் மூள்வதைத் தடுக்க முடியாது. அப்படியேதும் நடந்தால் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுக்கு மட்டுமே உகந்த இடமாக மாறும். அது வேதனையான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே இதேபோன்றதொரு யோசனையை சிஎன்என் ஊடகப் பேட்டியில் இம்ரான் கான் தெரிவித்திருந்தார். அதற்கு தலிபான்கள் பதிலடி கொடுத்திருந்தனர். தங்களுடைய ஆட்சி எப்படி அமைய வேண்டும் என்று பாகிஸ்தான் மட்டுமல்ல வேறு எந்த ஒரு நாடும் சொல்லி வழிநடத்த முடியாது என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியில், "இப்போது ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்களின் கைகளில் உள்ளது. இப்போது அவர்கள் மனதுவைத்து அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து அனைவரையும் உள்ளடக்கிய ஓர் ஆட்சியைக் கொடுத்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நாட்டில் அமைதி நிச்சயமாக நிலவும். ஆனால், இதில் ஏதேனும் சறுக்கல் ஏற்பட்டால் பெரிய குழப்பத்துக்கு வழிவகுக்கும். கூடவே உலகின் மிகப்பெரிய மனிதநேய நெருக்கடி ஏற்படும், அகதிகள் பிரச்சினை உருவெடுக்கும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் அவர் அதேபோன்ற கருத்தைத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நிலவரம் என்ன?
அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சியை நடத்த ஆப்கனுக்கு அறிவுரை கூறும் பாகிஸ்தானில் இந்துக் கோயில்கள் தொடர்ந்து சிதைக்கப்படுகின்றன. அண்மையில் கூட போங் என்ற இடத்தில் இந்துக்களின் கோயில் சிதைக்கப்பட்டதாக தி நேஷன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்ஸாப் கட்சி பெண்கள் பாதுகாப்பில் தவறிவிட்டதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. 2021 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து முதல் 6 மாதங்களில் மட்டுமே 6754 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 1890 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 3721 பேர் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். 752 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர் என பத்திரிகை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.