Last Updated : 21 Sep, 2021 09:14 PM

 

Published : 21 Sep 2021 09:14 PM
Last Updated : 21 Sep 2021 09:14 PM

மாஸ்க் அணியச் சொன்னதால் ஆத்திரம்: ஜெர்மனியில் பெட்ரோல் பங்க் ஊழியரைக் கொலை செய்த வாடிக்கையாளர்

மாஸ்க் அணியச் சொன்னதால் ஆத்திரமடைந்து ஜெர்மனியில் 20 வயதே நிரம்பிய பெட்ரோல் பங்க் ஊழியரை வாடிக்கையாளர் கொலை செய்த சம்பவம் அந்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையான இளைஞர் ஒரு மாணவர். கல்விச் செலவுக்காக பகுதி நேர வேலையாக அந்த பங்கில் அவர் வேலை செய்துவந்தார்.

இந்தச் சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. கரோனா கட்டுப்பாட்டு விதிகள் நிமித்தமாக ஜெர்மனியில் நடந்த முதல் வன்முறையாக இது கருதப்படுகிறது.

நடந்தது என்ன?

இடார் ஓபர்ஸ்டீன் எனும் பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்குகிறது. பெட்ரோல் பங்குடன் சேர்த்து சிறு பல்பொருள் அங்காடியும் உள்ளது. சம்பவத்தன்று இங்கு ஆண் ஒருவர் வந்துள்ளார். அவர் தனக்கு சில பீர் பாட்டில்கள் வேண்டுமென கேட்டுள்ளார். அப்போது கல்லாவில் இருந்த இளைஞர் அந்த நபரை மாஸ்க் அணியுமாறு சொல்லியுள்ளார். ஜெர்மணியில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற விதியை இளைஞர் எடுத்துரைத்துள்ளார். இதனால் அந்த இளைஞருக்கும், பீர் வந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்துக்குப் பின்னர் அந்த நபர் அங்கிருந்து ஆவேசமாகப் புறப்பட்டுச் சென்றார்.

அரை மணி நேரம் கழித்து திரும்பவும் அங்கு வந்த நபர், மாஸ்க் அணிந்து வந்தார். தனக்குத் தேவையானதை வாங்கிக் கொண்டு மாஸ்க்கை அகற்றினார். பின்னர் மீண்டும் அந்த இளைஞரிடம் வாக்குவாதம் செய்தார். பேசிக் கொண்டிருந்தபோதே திடீரென மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து இளைஞரின் தலையில் சுட்டார். அதன் பின்னர் அந்த நபர் போலீஸ் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.

49 வயதான அந்த நபர் போலீஸிடம் தான் கொலை செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டார். அவரைப் போலீஸார் கைது செய்தனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் நாளுக்கு நாள் தனது உரிமைகளில் அத்துமீறும் வகையில் நெருக்கடியைத் தருவதால், அந்த அழுத்தத்தில் இருந்து விடுபட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்தார்.

இந்தச் சம்பவம் ஜெர்மனி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேர்த்ல நடைபெறுகிறது. இத் தேர்தல் பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் 16 ஆண்டுகால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்நிலையில், ஜெர்மனியில் நடந்துள்ள இந்த கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான கொலை அரசியல் களத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x