

சூடான் அரசைக் கைப்பற்ற அந்நாட்டு ராணுவத்தின் ஒரு பிரிவினர் கிளர்ச்சியில் ஈடுபட, துரிதமாக செயல்பட்ட ராணுவத் தலைமையகம் 40 அதிகாரிகளையும் கைது செய்து சதியை முறியடித்தது.
ஆப்பிரிக்க கண்டத்தின் வட பகுதியில் உள்ளது சூடான். பரப்பளவு அடிப்படையில் ஆப்பிரிக்கக் கண்டத்திலேயே இது மிகப்பெரிய நாடு. வடக்கில் எகிப்தும், கிழக்கில் எரித்திரியாவும் அமைந்திருக்கும் சூடானில் பெரும்பாலான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகின்றனர்.
சூடான் நாட்டில் தற்போது இடைக்கால அரசு ஆட்சியில் உள்ளது. இந்த அரசின் பிரதமராக இருக்கிறார் அப்தல்லா ஹாம்டாக். முன்னதாக நீண்ட காலமாகவே ஒமர் அல் பஷீர் சூடான் நாட்டின் அதிபராக இருந்தார். 1989 முதல் 2019 வரை அவர் அதிபராக இருந்தார். அவர் ஆட்சியின் மீது மக்கள் அதிருப்தி கொள்ள ராணுவத் துணையுடன் மக்கள் அதிபரை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அமைந்த இடைக்கால அரசின் பிரதமரானார் அப்தல்லா ஹாம்டாக்.
இந்நிலையில், அண்மைக்காலமாகவே இடைக்கால ஆட்சிக்கு எதிராக ராணுவத்தில் ஒரு பிரிவினர் செயல்படத் தொடங்கினர். இவர்கள் அவ்வப்போது ஆட்சிக் கவிழ்ப்பு சதியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இன்றும் அப்படியொரு முயற்சி நடைபெற அதனை சூடான் அரசு துரிதமாக செயல்பட்டு தடுத்துள்ளது.
இது குறித்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், "சூடான் நாட்டு நாடாளுமன்றத்தை நோக்கி ராணுவத்தின் ஒரு பிரிவினர் படையெடுக்க. ராணுவமே டாங்குகளை சாலைகளின் குறுக்கே நிறுத்தித் தடுத்தது. குறிப்பிட்ட அந்த 40 பேரும் நீண்ட காலமாகவே ராணுவத் தலைமையகத்தின் தீவிர கண்காணிப்பில் இருந்துள்ளனர். இந்நிலையில், இன்று அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றபோது ராணுவத் தலைமையகத்தால் தடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் முன்னாள் அதிபர் ஒமர் அல் பஷீர் இருப்பதாக ஆளுங்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.