

லிபரல் அணியின் மீது நம்பிக்கை வைத்து என்னை மூன்றாவது முறையாக பிரதமராக்கிய கனட மக்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார் ஜஸ்டின் ட்ரூடோ.
கனடா நாட்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதனால், லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்டின் ட்ரூடோ 3-வது முறையாக பிரதமராகயிருக்கிறார். கனடா நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகப் பிரதமராகியிருக்கிறார்.
இந்நிலையில் தனது வெற்றி குறித்து ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், நன்றி கனடா. நீங்கள் வாக்களித்தமைக்கும். லிபரல் கட்சியின் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கும் மிக்க நன்றி. வளமான எதிர்காலத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நாம் கனடாவை முன்னோக்கி அழைத்துச் செல்லப் போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
ஜஸ்டின் ட்ரூடோவுக்கு 49 வயதாகிறது. 2015ல் ஆட்சிக்கு வந்த ட்ரூடோ 6 ஆண்டுகளில் மூன்றாவது பொதுத் தேர்தலை எதிர்கொண்டுள்ளார்.
இந்த முறை இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சியின் எரின் ஓ டூலிக்கே வெற்றி வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்புகள் பலவும் தெரிவித்தன. ஆனால், ட்ரூடோ அவற்றை முறியடித்து வரலாற்று வெற்றி பெற்றுள்ளார்.
கரோனாவை ஒழித்தல், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை சமாளித்தல், அனைவருக்கும் வீட்டுவசதி, துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்துதல் ஆகியன தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலித்தன. கனடாவில் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தப்படும் என்ற ட்ரூடோவின் அறிவிப்பு தான் அவருக்கான மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.
கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒன்டோரியோவில் சிலர் ட்ரூடோ மீது கற்களை வீசினர். இதனால் ட்ரூடோவின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்றெல்லாம் கூறப்பட்டது. இருப்பினும் அத்தனை கணிப்புகளையும் முறியடித்து ட்ரூடோ வெற்றி பெற்றுள்ளார். ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட ஆட்சி அமைக்கிறது.