

ஆப்கன் பெண்கள் விரைவில் பள்ளிகளுக்குத் திரும்பலாம் என்றும் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் ஆப்கன் கல்வித்துறை இணை அமைச்சரும் தலிபான் செய்தித் தொடர்பாளருமான ஜபிபுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளார்.
ஆப்கனின் பாஜ்வோக் செய்தி ஊடகம் ஜபிபுல்லா முஜாகீத் கூறியதாக இது தொடர்பான செய்தி வெளியிட்டுள்ளது. நாங்கள் இதுதொடர்பான இறுதிக்கட்ட ஆலோசனையில் உள்ளோம். விரைவில் இது நடக்கும் என்று ஜபிபுல்லா கூறியிருக்கிறார்.
முன்னதாக கடந்த சனிக்கிழமையன்று தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், திங்கள்கிழமை (அதாவது நேற்று) முதல் ஆண் ஆசிரியர்களும், ஆண் பிள்ளைகளும் பள்ளிகளுக்கு வர வேண்டும் என்று தெரிவித்தது. அப்போது பெண் ஆசிரியைகள் பற்றியும், பெண் பிள்ளைகள் பற்றியும் ஏதும் தெரிவிக்காததால் உலக நாடுகள் தலிபான்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஆப்கானிஸ்தான் கடந்த 20 ஆண்டுகளாக கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தைக் கண்டிருந்தது. 2001 தொடங்கி பெண் கல்வி 17%ல் இருந்து 30% ஆக ஏற்றம் கண்டுள்ளது. ஆரம்பப் பள்ளியில் 2001ல் பெண் பிள்ளைகள் எண்ணிக்கை பூஜ்யமாக இருந்தது. அதே 2018ல் ஆரம்பப் பள்ளியில் பெண் பிள்ளைகள் எண்ணிக்கை 2.5 மில்லியன் என்றளவில் இருந்தது. உயர்க்கல்வி நிலையங்களில் பெண்களின் எண்ணிக்கை 2001ல் 5000 என்றளவில் இருந்தது, 2018ல் அது 90,000 என்றளவில் அதிகரித்தது.
இத்தகைய சூழலில் தான் ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்தது. ஆரம்பத்தில் பெண் கல்வித் தடையில்லை என்று கூறிய தலிபான்கள் பின்னர் உயர்க் கல்விக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்தனர். பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை பெண் பிள்ளைகள் வரலாமா வேண்டாமா என்பதில் தெளிவற்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.
அண்மையில் யுனெஸ்கோ, யுனிசெஃப் போன்ற அமைப்புகள் ஆப்கனில் பெண்கள் பயிலும் பள்ளிகளை மூடுவது கல்விக்கான அடிப்படை உரிமையை மீறும் செயல் என்று கண்டன அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில், ஆப்கன் பெண்கள் விரைவில் பள்ளிக்குத் திரும்பலாம். அதற்கான இறுதி அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நற்செய்தியை தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.