2021-ம் ஆண்டில் மட்டும் 6.35 லட்சம் மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறினர்: ஐ.நா.தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இந்த ஆண்டு மட்டும் 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு எதிராகப் போராடிய தலிபான்கள் வசம் தற்போது அந்நாடு வந்துவிட்டது. அமெரிக்கா, நேட்டோ படைகள் வெளியேறத் தொடங்கியவுடன் ஆப்கானிஸ்தானைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேட்டோ படை, அமெரிக்கப் படை, அரசுப் படை மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த மோதல்களில் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் மட்டும் ஆப்கனிலிருந்து 6.35 லட்சம் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதாக ஐ.நா.தகவல் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் மனிதநேய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டில் ஏற்பட்ட வன்முறை, சண்டை, வறுமை ஆகியவற்றால் இதுவரை 6.35 லட்சம் மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்குப் புலம்பெயர்ந்துவிட்டனர்.

அதிலும் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், தலிபான் எதிர்ப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டபின் காபூல் நகரிலிருந்து மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியுள்ளனர்.

இதில் காபூலில் இருந்து வெளியேறிய மக்களில் 1,300 பேருக்கு ஐ.நா. சார்பில் உதவி வழங்கப்பட்டுள்ளது. குனார் மாகாணத்தில் இருந்து புலம்பெயர்ந்த மக்களில் 9,300 பேருக்கு ஐ.நா. சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர உலக உணவுத் திட்டமும் ரேஷன் பொருட்களை அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி வரை வழங்க உள்ளது. மைதான் வார்தாக் மாகாணத்தைச் சேர்ந்த 63 ஆயிரம் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

புலம்பெயர்ந்து செல்லும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட உதவிகள் வழங்குவதோடு அவர்களின் உடல்நலன் சார்ந்த உதவிகளும் அளிக்கப்படும். மருத்துவப் பரிசோதனை, கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் ஆகியவற்றுக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்படும்.

பாதக்ஸான் மாகாணத்தில் உள்ள யாவான், ராகிஸ்தான் மாவட்டங்களில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சின்னமை தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தடுக்கவும் ஐ.நா.சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது''.

இவ்வாறு ஐ.நா.அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in