

ரஷ்ய தேர்தலில் ஆளும் யுனைடட் ரஷ்யா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ள நிலையில் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் அலெக்ஸி நாவல்னி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய நாட்டின் நாடாளுமன்ற கீழ்சபை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இதன்மூலம் 450 பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 17-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே, யுனைடட் ரஷ்யா கட்சி முன்னிலை வகித்தது. 450 இடங்களில் 315 இடங்களைக் கடந்து கைப்பற்றியுள்ளது. கடந்த தேர்தலில் மொத்தம் 334 இடங்களைப் பெற்றிருந்த கட்சிக்கு இது சிறிய சறுக்கல் என்றாலும் கூட தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நாவல்னி, இந்த முடிவை நம்ப முடியவில்லை. 2011ல் தேர்தலில் மோசடி செய்தது போல் இப்போதும் செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
2011 தேர்தலில் மோசடி நடந்ததாக போராட்டம் நடத்தியதற்காகவே அலெக்ஸி கைது செய்யப்பட்டார்.
தேர்தலுக்கு முன்னதாக நாவல்னியின் அமைப்புகள் அனைத்தும் தடைசெய்யப்பட்டன. அதன் தலைவர்கள் அனைவரும் தேர்தலில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆப்பிள், கூகுள் நிறுவனங்கள் ஸ்மார் வோட்டிங் செயலியை தங்கள் சேவைகளில் இருந்து நீக்கின. இதுவும் புதின் அரசு கொடுத்த அழுத்தத்தாலேயே என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
தேர்தலில் வாக்களித்தது குறித்து 50 வயது பெண் ஒருவர் கூறுகையில், நடப்பு அரசியல் நிலவரத்தைப் பார்க்கும் போது வேறு யாரையும் நம்பிக்கைக்குரியவராகப் பார்க்க முடியவில்லை. அதனாலேயே புதின் கட்சிக்கு வாக்களித்தேன் என்றார்.