

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் பகுதியில் நடத்தப்பட்ட மூன்று குண்டுவெடிப்புகளில் மூன்று பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் இன்று (சனிக்கிழமை) மூன்று முறை குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் மூன்று பேர் பலியாகினர். பலியானவர்களில் இருவர் தலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மேலும், இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த 20க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
காபூல் விமான நிலையத்தில் கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பலர் பலியாகினர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்பு கேட்டது.
பின்னணி
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறினார். லட்சக்கணக்கான ஆப்கன் மக்களும் தலிபான்களின் ஆட்சிக்கு அஞ்சி வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. ஹசன் அகுந்த் பிரதமராகவும், முல்லா கனி துணைப் பிரதமராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.