

ஆப்கானிஸ்தான் முழுவதும் இன்று முதல் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்க தலிபான்கள் தலைமையிலான இடைக்கால அரசில் கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் மட்டுமே வரவேண்டும் என்று தெரிவித்த தலிபான்கள், மாணவிகள் வருகை குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை.
தலிபான் தீவிரவாதிகள் காபூல் நகரைக் கடந்த மாதம் கைப்பற்றியபின் அளித்த வாக்குறுதிக்கு மாறாக இப்போது செயல்படுகிறார்கள். காமா செய்திகள் தரப்பில் கூறுகையில், “ஆப்கானிஸ்தான் எமிரேட் அரசில் அனைத்து தனியார், அரசு சார்பில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மதரீதியான பள்ளிக்கூடங்கள் சனிக்கிழமை முதல் திறக்கலாம். ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே வரலாம்” எனத் தெரிவித்துள்ளது.
1996-2001ஆம் ஆண்டுவரை இருந்த அரசைப் போல் தலிபான் அரசு இருக்காது, பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில் அதிலிருந்து மாறுபடுகின்றனர்.
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில், “பெண்கள் பணிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், தங்கள் உரிமையைக் கேட்டும், கல்வி, வேலைவாய்ப்பு உரிமையைக் கேட்டும் பெண்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்துவது தொடர்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்களின் இந்த ஆட்சியால் ஆசிரியைகள், மாணவிகள் நிலை, எதிர்காலம் குறித்து சர்வதேச கல்வியாளர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும், வல்லுநர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தலைமையில் அமைந்துள்ள இடைக்கால அரசில் கல்வி அமைச்சராக இருக்கும் ஷேக் அப்துல்பாகி ஹக்கானி கூறுகையில், “ஷரியத் சட்டப்படி கல்விரீதியான நடவடிக்கைகள் இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆப்கனில் திறக்கப்பட்டன. ஆனால், அங்கு மாணவர்கள், மாணவிகள் தனித்தனியே அமரவைக்கப்பட்டு இடையே தனியாகத் திரை விரிக்கப்பட்டது.
மேலும், மகளிர் விவகாரத்துறை அமைச்சகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களையும் அனுமதிக்கவில்லை. அங்கு ஆண் ஊழியர்கள் மட்டுமே பணியாற்ற தலிபான்கள் அனுமதித்தனர். மேலும், மகளிர் நலத்துறை அமைச்சகத்தின் பெயரையும் தலிபான் அரசு “ஊக்குவித்தல் மற்றும் நல் ஒழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமையைத் தடுத்தல் துறை” என்று மாற்றியுள்ளது.