

இரண்டு அல்லது 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சொந்த வீட்டுக்கு மானியம் அளிக்கப்படும் என சீனாவின் கன்சு மாகாணம் அறிவித்துள்ளது.
சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கு சட்டரீதியாக அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் குன்சு மாகாணம் இரண்டு அல்லது 3 குழந்தைகள் பெற்றுக் கொண்டால் 40,000 யுவான் (6,211 அமெரிக்க டாலர்) மானியமாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு தம்பதியர் வீடு வாங்கலாம். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுக்கு 10,000 யுவான் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல் மொத்தம் 11 சலுகைகளை 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்காக அறிவித்துள்ளது. சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் மக்கள்தொகை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மூ குவான்சாங், குன்சு மாகாணத்தின் லின்சி கவுன்ட்டியின் இந்த அறிவிப்பு மற்ற மாகாணங்களுக்கும் ஒரு முன்னுதாரணம். கிழக்கு சீனாவின் மற்ற நகரங்களும் இத்திட்டத்தைப் பின்பற்றும் என நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்.
ஏற்கெனவே சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள சிச்சுவான் மாகாணம் கடந்த ஜூலை மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு அந்தக் குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை மாதம் 500 யுவான் பராமரிப்புத் தொகையளிக்கப்படும் என்று அறிவித்தது.