ஆப்கன் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ரஷ்ய அதிபர் புதின்
ஆப்கன் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்த பின்னர் உலக நாடுகள் பலவும் ஆப்கனுடனான பொருளாதார உறவைத் துண்டித்துள்ளன. மேலும், ஆப்கனின் சொத்துகளை முடக்கி வைத்து நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்நிலையில், ஆப்கன் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வலியுறுத்தியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 21-வது கூட்டம் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அந்நாட்டு அதிபர் இமோமலி ரஹ்மோன் தலைமையில் நடைபெற்று வருகிறது. கரோனாவால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள ரஷ்ய அதிபர் கானொலி வாயிலாகவே இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
இதில் பேசிய புதின், ஆப்கன் சொத்துகள் முடக்கத்தை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து சர்வதேச மாநாட்டை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தலிபான்களுடன் செயல்படுவது குறித்து ரஷ்யாவும் பரிசீலித்து வருகிறது என்று கூறினார்.
ஆப்கானிஸ்தான் கடந்த 15 ஆம் தேதி தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. அங்கு தலிபான்கள் இடைக்கால ஆட்சி அமைத்துள்ளனர். பிரதமராக ஹசன் அகுந்த், துணைப் பிரதமராக முல்லா பரதார் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி நடத்தப்படும். முன்புபோல் இல்லாமல் உலக நாடுகளுடன் நேசமான உறவை விரும்புவதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், 73 பேர் கொண்ட தலிபான் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பலரும் ஐ.நா.வால் தேடப்படும் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டவர்கள். இதனாலேயே உலக நாடுகள் தலிபானுடன் நட்பு பாராட்ட தயக்கம் காட்டிவருகிறது.
